பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 57                                                                                        இதழ் -
நாள் : 28-05-2023                                                                        நாள் : -0-௨௦௨௩

 
 

 
கிழக்கும் மேற்கும்
 
      சில ஊர்களின் திசையை அவற்றின் பெயரால் நன்கு அறிய முடிகிறது. தமிழில் குணக்கு என்பது கிழக்குத் திசையையும் குடக்கு என்பது மேற்குத் திசையையும் குறிக்கின்றது. இவ்விரு திசை சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன.
 
    ஒரு காலத்தில் சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய ஜெயங்கொண்ட சோழபுரத்துக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஊர் குணவாசல் என்று பெயர் பெற்றுள்ளது. 
 
    தஞ்சை நாட்டில் குடவாசல் என்பது ஓர் ஊரின் பெயர். முன்னாளில் சிறந்து விளங்கிய ஒரு நகரத்தின் மேற்குத் திசையில் அவ்வூர் அமைந்திருந்தது. இன்னும், குடகு என்னும் நாடு தமிழ்நாட்டில் மேற்கு எல்லையாக விளங்கிற்றென்று இடைக்காலத் தமிழ் இலக்கணம் கூறுகின்றது. தமிழகத்தின் மேற்றிசையில் அமைந்த காரணத்தால் தமிழ் நாட்டார் அதனைக் குடகு என்று அழைத்தார்கள். கிழக்கு, மேற்கு என்னும் சொற்களும் சில ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன. 
 
    நாகப்பட்டினத்துக்கு அருகேயுள்ள வேளூர், கீழ்வேளூர் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூரின் பெயர் இப்பொழுது கீவளுர் என்று சிதைந்து வழங்கி வருகின்றது. மலாடு என்னும் பழைய நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் கீழூர் ஆகும். 
 
    பாண்டி நாட்டுக் கரையில் உள்ள கீழக்கரை என்னும் துறையும், மதுரையிலுள்ள கீழக்குடி என்னும் ஊரும் திசைப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. 
 
    மதுரையிலுள்ள மேலூரும், வடஆர்க்காட்டிலுள்ள மேல்பாடியும் மற்ற ஊர்ப்பெயர்களும் மேற்குத் திசையைக் குறிப்பனவாகும். அதேபோல் கீழடி முதலிய ஊர்களும் அதன் திசை சொல்லிருந்து தோன்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment