பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 27                                                                                    இதழ் -
நாள் : 30 - 10 - 2022                                                                  நாள் : - - ௨௦௨௨
 

 ஆத்திசூடி வெண்பா – 25

ஆத்திசூடி (ஔவை)

” அரவம் ஆட்டேல் ”
உரை
     ஆடுதற்குரிய பாம்பினைத் தலையெடுத்து ஆடும்படிச் செய்யாதே.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 25
    இருடிமேற் செத்தபாம் பேற்றிப் பரீக்கித்
    தரவினாற் பட்ட தறிந்தே – திரைகடல்சூழ்
    மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்று
    எண்ணி அரவமாட் டேல்

 
உரை
     புன்னைவன மன்னனே! முனிவராகிய சமீகர் மீது இறந்த பாம்பு ஒன்றை போட்டுச் சென்ற பரீட்சித்து மன்னன் பாம்பினால் எய்திய அல்லலை அறிந்துகொள். அதனால் அலைவீசும் கடல்சூழ்ந்த மண்ணுலகில் இது கூடாச் செயல் என்று சிந்தித்து நீ பாம்பினைத் தலையெடுத்தாடுபடிச் செய்யாதே.
 
விளக்கம்
     இருடி – முனிவர். பரீக்கித்து – மகாபாரதத்தில் வரும் பீட்சித்து மன்னன். பட்டது – அல்லலுற்றது. திரை – அலை. திரைகடல் – அலைவீசும் கடல். அல்லல் ஏற்படுத்தும் விலக்கத்தக்க செயல்களைச் செய்யாது ஒழிக என்பதை அரவமாட்டேல் என்று எடுத்துரைத்தார். மண்ணுலகநெறிப்படி எது அல்லல் தரும் பாவம் என்பதை ஆராய்க என்பதை “திரைகடல்சூழ் மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்று எண்ணி” என்றார். எண்ணி – சிந்தித்து, ஆராய்ந்து. உயிர்க்கு இறுதி பயக்கும் செயலைச் செய்யாதீர் என்பதைப் பரீட்சித்து மன்னன் கதை கொண்டு எடுத்துரைத்தார்.
 
பரீட்சித்து கதை
    அருச்சுனனுடைய மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரீட்சித்து. இந்தப் பரீட்சித்து மன்னன் காட்டில் வேட்டைக்குப் போய் ஒரு மானை அம்பால் எய்தான். அந்த மான் அம்புபட்டுத் தப்பியோடிற்று. அதனை அவன் தேடிச் செல்லும்பொழுது சமீகர் என்னும் முனிவர் எதிர்ப்பட்டார். அவரை நோக்கி மான் குறித்து விசாரித்தான். அவர் ஊழ்கத்தில் நிலைத்திருந்தமையால் அவன் வினாவிற்கு யாதொரு விடையும் அளிக்கவில்லை. அவர் பேசவில்லை என்று சினங்கொண்ட பரீட்சித்து அங்கு இறந்துகிடந்த பாம்பொன்றை எடுத்து அவருடைய தலையில் போட்டுவிட்டுப் போனான். இதைக் கேள்விப்பட்ட அவருடைய மகன் சிருங்கி பெருஞ்சினம் கொண்டு பரீட்சித்து பாம்பினால் கடியுண்டு இறக்குமாறு சபித்தான். அச்சாபத்தின்படி பரீட்சித்து எத்தனையோ தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் தக்கன் என்னும் பாம்பினால் கடியுண்டு இறந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பில் கண்டவாறு)
 
கருத்து
     எக்காரணத்தைக் கொண்டும் உயிர்க்கு இறுதி பயக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment