பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 37                                                                                        இதழ் -
நாள் : 08-01-2023                                                                          நாள் : 0அ - 0 - ௨௦௨

  

 

பழமொழி – 37

“ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் விளங்காது”
 
விளக்கம்
     கடலில் வாழும் ஆமையும், அமீனாவும் (நீதிமன்ற வசூல் செய்யும் அலுவலன் – டவாலி) வீட்டினுள் நுழைந்தால் அவ்வீடு முன்னேறாது என்று நாம்  இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
 
“ஆமை புகுந்த வீடு“ (கல்லாமை, முயலாமை, இயலாமை)

“அமீனா புகுந்த வீடு“ (நீதிமன்ற வசூல் செய்யும் அலுவலன்)

     இங்கு “ஆமை“ என்றால் கல்லாமை, முயலாமை, இயலாமை ஆகியவற்றைக்  குறிக்கிறது. இம்மூன்றும் இல்லாதவன் வீடு முன்னேற்றம் காண முடியாது என்றும், “அமீனா” என்றால் நீதிமன்றத்தில் பணிபுரியும் வசூல் செய்யும் அல்லது நீதிமன்ற ஆணைகளைக் கொண்டு சர்க்கும் அலுவலன் ஒருவரின் வீட்டிற்கு வந்து சென்றால் அவ்வீட்டில் சட்டரீதியான சிக்கல் இருக்கும் என்று பிறர் புரிந்து கொள்வர். ஆகையால் ஆமை, அமீனா ஆகிய இரண்டையும் ஒன்றாய் வைத்து நம் முன்னோர்கள் “ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் விளங்காது“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர். 
 
     மேலும், ஆமையை நீர்வழிப் பாதைகளைக் கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்துவர். ஆமை பெரும்பாலும் தாழ்வான, ஈரப் பதம் உள்ள இடங்களை நோக்கியே செல்லும். ஆமை புகும் அளவுக்கு நம் வீடு இருந்தால் நாம் வீட்டினை ஏரியிலோ, குளத்திலோ கட்டி இருக்கிறோம் என்றும் அவ்விடம் நாம் வாழத் தகுதியே இல்லாத இடம் என்றும் கொள்வர். அத்தகைய வீட்டில் வசித்தால் உடல் நலம் கெடும், வீடும் இடிந்து (உருக்குலைந்து) விடும் என்றறிந்த நம் முன்னோர்கள் ஆமை புகுந்த வீடு விளங்காது என்று விளக்கம் சொல்லியிருக்கின்றனர்.
 
      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment