இதழ் - 130 இதழ் - ௧௩௦
நாள் : 20- 10 - 2024 நாள் : ௨௦ - ௧௦ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
சோழ மன்னன் ஒருவன் தன் அவைக்களப் புலவர்களைப் பார்த்து ஒர் இரவுக்குள் நான்கு கோடிப் பாடல்களைப் பாட வேண்டும் என ஆணையிட்டான். செய்வதறியாது திகைத்து நின்றனர் புலவர்கள். அச்சமயம் அங்கு வந்த ஔவை, புலவர்களின் பதட்டத்திற்கான காரணத்தினைக் கேட்டறிந்தார்.
மிகச் சிறந்த தமிழறிவும் புத்திக்கூர்மையும் கொண்ட ஔவை, புலவர்கள் முன்னிலையில் ஒரு பாடலைப் பாடினார். இந்த ஒரு பாடலைக் கொண்டு போய் மன்னரிடம் காட்டுங்கள் என்றார். இதனைக் கேட்ட புலவர்கள் திகைத்தனர். ஒரு பாடல் எப்படி நான்கு கோடிப் பாடல்களுக்குச் சமம் ஆகும் என்ற எண்ணத்துடன் அப்பாடலை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டனர். பாடலைக் கேட்கக் கேட்க மகிழ்ச்சியில் விழிகள் விரிந்தன.
நாமும் அப்பாடலைப் பார்க்கலாம். தமிழின் சுவையைப் பருகலாம்; ஔவையின் புலமையையும் தமிழின் பெருமையையும் எண்ணி வியக்கலாம்.
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்".
இப்பாடலின் விளக்கத்தினைப் பார்க்கலாம். இப்பாடல் மூலம் அனைவருக்கும் நான்கு செயல்களைக் கூறுகிறார். அச்செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு கோடிப் பொன்னுக்குச் சமமானவை என்கிறார்.
- நம்மை மதித்து நடக்காதவரது வீட்டின் முற்றத்தினை மிதிக்காமல் இருப்பது, அதாவது அங்கு போகாமல் இருப்பது கோடிப் பொன்னுக்குச் சமமானதாகும்.
- அன்புடன் உண்ணுமாறு கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்குச் சமமானதாகும்.
- ஒரு கோடிப் பொன் கொடுத்தாவது,நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்குச் சமமானதாகும்.
- பல கோடிப் பொன் கிடைப்பதாக இருந்தாலும், சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடிப் பொன்னுக்குச் சமமானதாகும்.
இப்பாடலில் உள்ள நான்கு செயல்களில் முதல் இரண்டும் செய்யக்கூடாதவை என்றும் கடைசி இரண்டும் செய்ய வேண்டியவை என்றும் பாடியுள்ளார்.
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment