பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 27                                                                                    இதழ் -
நாள் : 30 - 10 - 2022                                                                  நாள் : - - ௨௦௨௨

   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
செறு
       செறு என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் ஆகும். சித்தூர் நாட்டில் ராயலு செறுவு என்ற சிற்றூர் உண்டு. விஜயநகர பெருவேந்தர் கிருஷ்ண தேவராயர் அங்கு பெரிய குளத்தை வெட்டி வேளாண்மையை பெருக்குவதற்காக அமைத்த காரணத்தால் அதற்கு ராயர் செறு என்று பெயர் வழங்கப்படலாயிற்று.

தாங்கல்
       சிற்றேரியைக் குறிக்கும் ஏந்தல், தாங்கல் என்னும் இரு சொற்களும் இன்றும் ஊர்ப்பெயர்களில் வழங்குகின்றன. வடஆற்காட்டில் ஆலந்தாங்கல் ஊரும், செங்கற்பட்டில் வளவன் தாங்கல் ஊரும் தாங்கல் பெயரால் பெயர்பெற்றுன.

துருத்தி
   தமிழ்மொழியில் ஆற்றின் நடுவே அமைந்த பகுதி துருத்தியென்று குறிக்கப்பெறும். தஞ்சை நாட்டிலுள்ள குற்றாலத்தின் பழம்பெயர் திருத்துருத்தி என்பதாகும். காவிரியாற்றின் நடுவே அமைந்ததிருந்த திருத்துருத்தியின் சிறப்பினை திருநாவுக்கரசர் பாடுகிறார். 

     " பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
       துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே "

 
     என்பது அவர் திருவாக்கு. சாசனங்களில் அவ்வூர் "வீங்குநீர்த் துருத்தி" என்று குறிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மற்றொரு துருத்தி திருப்பூந்துருத்தியாகும்.

துறை
     ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடம் துறை எனப்படும். தமிழ்நாட்டில் ஆற்றை அடுத்துள்ள சில ஊர்கள் துறை என்று வழங்கி வருவதைக் காணலாம். காவிரியாற்றின் இருமருங்கும் அமைந்த செழுஞ் சோலைகளில் மயில்கள் தோகை விரித்தாடும்; மந்திகள் கொஞ்சிக் குலாவிக் கூத்தாடும். இங்ஙனம் மயில்கள் ஆடும் துறை மயிலாடுதுறை என்றும், குரங்குகள் ஆடும் துறை குரங்காடுதுறை என்றும் பெயர் பெற்றன. மயிலாடுதுறை இப்போது மாயவரமாக மாறியிருக்கிறது. 
 
     காவிரியின் வடகரையில் ஒரு குரங்காடுதுறையும் தென்கரையில் மற்றொரு குரங்காடுதுறையும் உண்டு. இக்காலத்தில் தென்குரங்காடுதுறை ஆடுதுறை என்றே வழங்குகின்றது. இன்னும், காவிரியாற்றில் கடம்பந்துறை, மாந்துறை முதலிய பல துறைகள் பாடல் பெற்ற பதிகளாக விளங்குகின்றன. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாற்றில் பூந்துறை, குறுக்குத்துறை முதலிய துறைகள் உள்ளன.
 
( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment