இதழ் - 142 இதழ் - ௧௪௨
நாள் : 19 - 01 - 2025 நாள் : ௧௯ - ௦௧ - ௨௦௨௫
ஔவையின் அற நூல்களில் ஒன்று மூதுரை. இதனை வாக்குண்டாம் என்றும் அழைப்பார்கள். 31 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல்.
முதல் பாடலே ஒருவருக்கு செய்த உதவிக்குரிய பலனை எதிர்பார்க்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தைக் கொடுக்கிறது. எனினும் அப்பாடிலிலே செய்த உதவிக்குரிய பலன் நிச்சயம் நம்மை வந்தடையும் என்பதையும் கூறுகிறார்.
"நன்றி ஒருவருக்கு செய்த கால்"
எனத் தொடங்கும் வெண்பாவே மேற்கூறிய கருத்தைக் கொண்டிருக்கிறது.
அடுத்த பாடலிலே நல்லவருக்குச் செய்யும் உதவியும் இரக்கம் இல்லாத நெஞ்சையுடையவர்க்குச் செய்யும் உதவியும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதனைக் கூறுகிறார்.
இந்த உலகில் இருக்கும் ஒரு நல்லவருக்காக இவ்வுலகம் நல்லவிதமாக இயங்கிக் கொண்டிருக்கும் என்பதனை மிக அழகாக
"நெல்லுக்கு இறைத்த நீர்"....
என்ற வெண்பாவில் கூறியுள்ளார்.
கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் மூலம் கற்றலின் மகத்துவத்தையும் சிறப்பையும்,
"மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கி" ...
என்ற வெண்பா மூலம் அறிந்து கொள்ளலாம்.
இறுதி வெண்பாவில்,
"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்–மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்"
என்று பாடுகிறார்.
அதாவது, தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்றவரைக் காக்கவே செய்வர்.
மூதுரையின் மூலம் ஒருவருக்கு நாம் செய்யும் உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, அறிவுடையவர் செயல் எவ்வாறு இருக்கும் என்பதாகக் கூறி முடிக்கிறார். இடையில் உள்ள அத்தனை வெண்பாக்கள் மூலம் பல நற்கருத்துகளைக் கூறியுள்ளார். இந்த மூதுரையினைச் சிறுவர்கள் மாத்திரமல்ல பெரியவர்களும் உணர்ந்து கற்பதனால் நல்ல சமூகம் உருவாகும் என்பது திண்ணம்.
ஔவையின் கருத்தினை நாமும் பின் தொடரலாம் . . .
வரும் கிழமையும் ஔவை வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment