பக்கங்கள்

தேவார மொழி

இதழ் - 186                                                                             இதழ் - ௧
நாள் :  28 - 12 - 2025                                                          நாள் :    - ௨௦௨




தோடுடைய செவியன் - 3
 
    
     யார் அந்த புலிக்குட்டி? யார் அந்த சிங்கக் குட்டி? என்ற வினாவிற்கு விடைதெரிய சில புராணச் செய்திகளை நாம் அறியவேண்டும். 

    மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார். அக்குழந்தைக்கு உரிய கல்விகேள்விகளை அளித்தார். கற்றதனால் ஆயபயன் வாலறிவனின் நற்றாள் தொழுவது என்று உணர்ந்துகொண்ட மழன் தந்தையாரின் ஆணைப்படி சிவபூசையில் ஈடுபட்டார். தில்லை வனம் நோக்கிச் சென்றார். அங்கு பொழுது புலரும்முன் மலர்பறித்துவந்து சிவபூசை செய்வது அவர்வழக்கம். விடியும்முன் இருளில் மலர் பறிப்பதால் சிலபொழுது வழிபாட்டுக்கு ஆகாத அழுகிய மலர்களையும் அறியாமல் பறித்துவந்துவிடுவார். அது இவருக்கு மிக உளவருத்தத்தை அளித்தது. எனவே சிவபெருமானிடமே முறையிடலானார். “இறைவா, இருட்டில் மலர் பறிப்பதாலும் மரத்தின் மேல் ஏறுவதற்கு இயலாதிருப்பதாலுமே இத்துன்பம் நேரிடுகிறது. எனவே எனக்கு இருட்டில் பார்க்கும் பார்வைத் திறனும் புலியின் கால்களைப் போன்ற நகங்களும் வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவ்வாறே அருளினார். புலிபோன்ற கால்களையும் இருளை ஊடுருவும் விழிகளும் பெற்றதால் அவரை ‘புலிக்கால் முனிவர்’ என்று அழைத்தனர். சமசுகிருதத்தில் ‘வியாக்கிரபாதர்’ என்றனர். வியாக்கிரம் என்றால் புலி என்று பொருள். 

    சிவபூசையில் தொடர்ந்து ஈடுபட்டு இறைவனின் திருக்கூத்துக் காட்சியைக் கண்டுகளித்தார். பதஞ்சலி முனிவரும் இவருடன் திருக்கூத்தைக் கண்டு களித்தார். திருமூலர் கூறும் நந்தியின் அருள் பெற்ற எட்டு அருளாளர்களுள் புலிக்கால் முனிவரும் ஒருவர். ஆனால் நாம் சிந்திக்கும் சிவபெருமான் பாலூட்டிய புலிக்குட்டி இவரல்ல. இவர் புலி. அப்படியானால் புலிக்குட்டி யார்?

    வியாக்கிர பாதர் ஒருமுறை வசிட்டரின் திருமடத்திற்குச் சென்றார். இவரது சிவபக்தியைக் கண்ட வசிட்டர் தனது தங்கை ஆத்ரேயியை அவருக்கு மணஞ்செய்து கொடுத்தார். வியாக்கிரபாதருக்கும் ஆத்ரேயிக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. உபமன்னியு என்று பெயரிட்டு வளர்த்தனர்.  குழந்தை வசிட்டரின் இல்லத்தில் வளர்ந்தது. அங்கு கடவுட்பசுவாகிய காமதேனுவின் பாலை அருந்தி வளர்ந்தார் உபமன்னியு. குழந்தைக்கு ஐந்து வயதான பிறகு மனைவியையும் குழந்தையையும் தனது இல்லத்திற்கு வியாக்கிரபாதர் அழைத்துவந்தார். 

    காமதேனுவின் பாலருந்தி வளர்ந்த உபமன்னியு தந்தையின் இல்லத்தில் அளிக்கப்பட்ட எளிய பாலை விரும்பாது அழுதார். பிறப்பிலேயே சிவபக்தராகப் பிறந்தவராதலால் அவரது அழுகைக்கு இரங்கிய சிவபெருமான் பாற்கடலையே அளித்து அருந்தச்செய்தார். புலியாகிய வியாக்கிரபாதர் பெற்ற பிள்ளை உபமன்னியு முனிவர் புலிக்குட்டிதானே. எனவேதான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ‘சிவபெருமான் புலிக்குட்டிக்குப் பால் கொடுத்தார்’ என்றார். 

“பொருந்துபசி யால்விழி இரண்டும் பிசைந்தழு
புலிக்குருளை ஒன்றுவப்பப்
 பொங்குபா லாழியை அழைத்துக் கொடுத்தசிவ
புண்ணியன்” (வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ், பருவம் 2, பா.5)
என்பன மகாவித்துவானின் சொற்கள். 

     “பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற” என்று திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் இயற்றிய திருவுந்தியாரும், “பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்” என்று சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் “அத்தர் தந்த அருட்பாற் கடல்உண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்” என்று சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணமும் இந்நிகழ்ச்சியைக் பதிவுசெய்கின்றன. 

    தமிழ் இலக்கியங்கள் பல உபமன்னியு முனிவருக்கு இறைவன் பாற்கடலை ஈந்தான் என்று சுட்டிக்காட்டியிருந்தாலும் ‘புலிக்குட்டிக்கு பால் கொடுத்தான்’ என்று நயம்படக் கூறியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். சரி, சிவபெருமான் பாலூட்டிய புலிக்குட்டி யாரென்று தெரிந்துவிட்டது. உமையம்மை பாலூட்டி சிங்கக்குட்டி யார்?

(அறிவோம்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment