நாள் : 05-11-2023 நாள் : 0௫-௧௧-௨௦௨௩
எழுத்துப்பேறு
எழுத்துப்பேறு
- பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும்.
- சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அது எழுத்துப்பேறு எனப்படும்.
- விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே எழுத்துப்பேறு ஆகும்.
- எழுத்துப்பேறு காலம் காட்டாது.
சான்று
- பாடுதி = பாடு + த் + இ
- மொழியாதான் = மொழி + ய் + ஆ + த் + ஆன்
- இச்சொற்களில் ‘இ’ என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிக்கு முன்னும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும் ‘த்’ என்பது எழுத்துப்பேறாகும்.
பகுபத உறுப்பிலக்கணத்தின் இன்றியமையாமை
தமிழ் ஓர் ஒட்டுநிலைமொழி. ஓரெழுத்து ஒரு மொழிச்சொற்கள் இருப்பினும் தமிழில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லாவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்தே சொல்லாகின்றன. அவ்வாறு சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கு ஒரு மொழியியல் நுட்ப அடிப்படை உள்ளது.
பகுதி ஒரு மொழியின் அடிப்படையான வேர்ச்சொல்லாகும். புதிய சொல்லாக்கத்திற்கு வேர்ச்சொற்களின் வருகை அவற்றின் சேர்க்கை பற்றிய மொழியியல் நுட்ப அறிவு இன்றியமையாதது. இதன் மூலம் துறைதோறும் புதியகலைச் சொற்களை உருவாக்க முடியும்.
திணை, பால், எண், இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி தமிழ்மொழி. இச்சிறப்புக்குக் காரணம் சொல்லின் விகுதி ஆகும். இவ்வாறு வேறுவேறு உறுப்புகளை இணைத்துச் சொற்களை உருவாக்க முடியும். இச்சொற்களை வேண்டும்போது பிரித்துக் கொள்ளலாம்; மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாம். பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாது.
பகுபதத் தன்மை உள்ள மொழியைக் கற்றுக்கொள்வது எளிது. பிற மொழியினர் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ள இதுவும் ஒருகாரணம் ஆகும். மேலும், இப்பகுபதத் தன்மையால் எண்ணிறந்த சொற்கள் உருவாகின்றன. இது மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது ஆகும்.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020.
No comments:
Post a Comment