இதழ் - 167 இதழ் - ௧௬௭
நாள் : 27 - 07 - 2025 நாள் : ௨௭ - ௦௭ - ௨௦௨௫
சோழ நாட்டில் வணிகர் குலத்தில் பிறந்த புனிதவதி என்ற பெண்ணே பின்னாளில் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்படுகிறார். இவர் நாயன்மார்களில் ஒருவராக உள்ளார். சைவத்திற்கு மட்டுமன்றி தமிழுக்கும் தொண்டாற்றிய இவரை தமிழ்ப் புலவர் வரிசையில் வைப்பதில் தவறு எதுவும் இல்லை.
சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் வைராக்கியம் அடைந்து, தொண்டை நாட்டில் பிறவா யாக்கைப் பெரியோனுடன் இரண்டறக் கலந்த புனிதவதி என்ற பெண், தமிழ் உலகிலும் சைவப் பெருவெளியிலும் தன் இருப்பினைப் பதிவு செய்துள்ளார் எனில் அது மிகையல்ல.
பக்தி இயக்க காலத்தின் தோற்றுவாயாக, பக்தி இயக்கத்தின் விதையாக இவர் காணப்படுகிறார் என்பது வரலாறு.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலில் அந்தாதி பாடிய பெருமைக்குரியவர்.
கடைகாப்பு என்ற ஒன்றை முதன் முதலில் இவரது பாடல்களில் தான் காண முடிகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், தன்னை வேண்டாம் எனக் கூறிய கணவரிடம் இறைஞ்சாமல், உனக்கு நான் வேண்டாமா? சரி எனக்கும் நீ வேண்டாம் என எவருக்கும் பயப்படாமல் அந்தக் காலத்தில் முடிவு எடுத்த துணிச்சலான முதல் பெண்மணி.
தனது அழகிய உருவத்தை வேண்டாம் என ஒதுக்கிப், பேய் உருவத்தை வேண்டிப் பெற்றுக் கொண்ட முதல் பெண்மணி.
எல்லாவற்றுக்கும் மேலாக கைலாச வாசனால் அம்மையே என அழைக்கப்பட்ட முதலும் முடிவுமான பெண்.
இவர் பாடியவை,
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
- திருவிரட்டை மணிமாலை
- அற்புதத் திருவந்தாதி
எல்லோருக்கும் மூத்தவளான இவரது பாமாலைகள் பன்னிரு திருமுறைகளில் 11வது திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இசையின் தாய் எனச் சிறப்பிக்கப்படும் காரைக்கால் அம்மையார் பாடிய ஆதிப் பதிகமான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இசைப்பாடல் என அழைக்கும் தகுதி கொண்டது.
சைவ சமய வரலாற்றில் முதல் இசைப் பாடலும் இதுவே ஆகும்.
வரும் கிழமையும் அம்மை வருவார்...
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020

No comments:
Post a Comment