பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 157                                                                               இதழ் - ௧
நாள் : 11 - 05 - 2025                                                              நாள் :  -  - ௨௦௨



பூட்டுவிற்பொருள்கோள்


     செய்யுளில் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் உள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்வது பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும். பூட்டுவிற் பொருள்கோளை  விற்பூட்டுப் பொருள்கோள், எனவும் குறிப்பிடுவர்.

வில்லில் கயிறு கட்டப்படும். அவ்வாறு கட்டும்போது வில்லின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கயிற்றைக் கொண்டு வந்து வில்லின் மேற்பகுதியில் இணைப்பர். அதுபோல் செய்யுளின் கடைசி அடியின் இறுதியில் உள்ள சொல்லை அதன் முதல் அடியில் முதலில் உள்ள சொல்லோடு கொண்டுவந்து

 சேர்த்துப் பொருள் கொள்வது, பூட்டுவிற் பொருள்கோள் எனப்படும்.ஷ

“எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்

பொருள்நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்” (நன்னூல் நூற்பா. எண். 415)

 சான்று

“திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்

மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் -

உறந்தையர்கோன் தண்ணார மார்பில்        

தமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு”         (முத்தொள்ளாயிரம்)

      இப்பாடலைச் சொற்கள் உள்ள வரிசை முறையிலேயே பொருள் கொண்டால், ‘தீமைகளை வெளிவரச் செய்யுங்கள்’ என்பதாகப் பொருள்படும். இப்பாடலின் இறுதியில் உள்ள கதவு என்னும் சொல்லை இச்செய்யுளின் முதற் சொல்லாகச் சேர்த்துப் பொருள் கொள்ளும் போது இப்பாடலின் சரியான பொருள் கிடைக்கிறது. அதாவது ‘கதவைத் திறந்து விடுங்கள். திறக்காவிட்டால் உறந்தையின் மன்னனைக் காணாமல் பெண்கள் இறந்துவிடும் பெரும் துன்பம் ஏற்படும்’ என்பது அப்பாடலின் பொருள்.

  கதவு என்னும் சொல்லைச் செய்யுளின் முதலில் கொண்டு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே இப்பொருள் கிடைக்கும். 



திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment