இதழ் - 163 இதழ் - ௧௬௩
நாள் : 28 - 06 - 2025 நாள் : ௨௮ - ௦௬ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 163
' எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு '
விளக்கம்
ஒருவன் எருமையைக் கொன்று சிறப்பாக விருந்து வைக்க எண்ணி அதற்கான மசாலாப் பொருள்களை மட்டும் சரியாகப் பயன்படுத்தாமல் கஞ்சத்தனம் செய்வது தவறாகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
உடுக்கை மருந்து உறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'
ஒருவன் தன்னிடம் வந்த மற்றொருவனுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், நோய்க்கு மருந்தும், தங்குவதற்கு இருப்பிடமும், இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து, அவர் குறைகளைத் தீர்த்தலான செயல்களைச் செய்து, அவரை அனுப்பி வைத்து, அவர்பால் இனிமையான சொற்களை மட்டும் சொல்லாமல் இருப்பது மிகவும் தவறாகும். அது, எருமையைக் கொன்று சமைத்து விருந்து வைக்கத் தொடங்கும் ஒருவர், அதற்குரிய மசாலாப் பொருள்களுக்குக் கஞ்சத்தனம் செய்வது போன்றதாகும். என்பதைக் குறிக்கவே 'எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment