இதழ் - 159 இதழ் - ௧௫௯
நாள் : 01 - 06 - 2025 நாள் : ௦௧ - ௦௬ - ௨௦௨௫
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் காரியாசன் ஆவார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவராவார். இவரது காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு ஆகும். சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர் என்பார்கள்.
அறமும் அறச்செயல்களின் சிறப்பும் பற்றியது இவர் இயற்றிய பஞ்சமூலம் என்னும் நூல் எனலாம். இந்நூலில் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான்.
அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன. கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் அமைந்துள்ளது. ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமணர் என உறுதியாகக் கூறலாம்.
சிறுபஞ்சமூலம் என்ற நூலில், பாயிரச் செய்யுள் உட்பட நூறு (100) செய்யுள்கள் உள்ளன. பல பாடல்கள் ‘மகடூஉ முன்னிலை’யாக அமைந்துள்ளன. ‘மகடூஉ முன்னிலை’ என்பது. ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல பாடலை அமைப்பது.
தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களே சான்றாகும்.
வரும் கிழமையும் காரியாசான் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment