இதழ் - 166 இதழ் - ௧௬௬
நாள் : 20 - 07 - 2025 நாள் : ௨௦ - ௦௭ - ௨௦௨௫
சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்
புலவரும் ஊர்ப்பெயரும்
குறுங்கோழியூரார்
பழந்தொகை நூல்களில் குறுங்கோழியூர் கிழார் என்னும் சொல் வேளாளரைக் குறிக்கும். ஆதலால், அப்புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்த வேளாளர் என்பது விளங்கும். முன்னாளில் குறுங்கோழி என்று தொண்டை நாட்டில் பெயர் பெற்றிருந்த ஊர் இப்போது கருங்குழி எனச் செங்கற்பட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உள்ளது.
பெருந்தலைச்சாத்தனார்
முற்காலத்தில் இருந்த மற்றொரு புலவர், பெருந்தலைச்சாத்தனார். குமணன் என்னும் சிறந்த வள்ளலைக் காட்டிலே தேடிக் கண்டு சோகம் நிறைந்த சொற்களால் அவன் உள்ளத்தை உருக்கி, அவன்பால் தலைக் கொடை பெற்ற புலவர் இவரே. பெருந்தலை என்னும் ஊரில் பிறந்த சாத்தனார், பெருந் தலைச் சாத்தனார் என்று அழைக்கப் பெற்றார். அவ்வூர், பெருந்தலையூர் என்னும் பெயரோடு கொங்கு நாட்டில் காணப்படுகின்றது. இன்றும் குமண வள்ளலுக்குரிய ஒரு நாடும் கொங்குநாட்டின் பாகமேயாகும். கொங்குநாட்டைச் சேர்ந்த புலவர் ஒருவர் கொடிய வறுமையால் துன்புற்ற நிலையில் கொங்குநாட்டு வள்ளலை நாடிச் சென்று அவனிடம் தன் குறையை முறையிட்டார் என்பது மிகப் பொருத்தமாகவே தோன்றுகின்றது. இவ்வாறே சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரையும் சீத்தலை என்னும் ஊரில் பிறந்தவர் என்று கொள்ளுதலே பொருத்த முடையதாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment