பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 197                                                                          இதழ் - ௧௯௭
நாள்  :  12 / 04 / 2026                                                      நாள்   :  ௧௨ / 0௪ / ௨௦௨௬




பழமொழி அறிவோம்

பழமொழி – 197

' ஓம்புவார் இல்லெனில் சென்று படுமாம் உயிர் '

விளக்கம்
     தன் நாட்டுக் குடிகளின் தேவை அறிந்த ஓர் அமைச்சன் இல்லாவிடில் அந்நாட்டு மக்கள் நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து அல்லல்பட்டு உயிர் விடுவர் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

உண்மை விளக்கம்

        மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
        அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
        ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
        சென்று படுமாம் உயிர்'.

    தாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றினும், மனத்தாலும் வாயாலும், உடலாளும், அறிந்து அடங்கியவர்களாக விளங்கி, தம் நாட்டின் நன்மை ஒன்றையே எண்ணியவராக இருந்து, ஒன்றுக்கும் வருத்தங் கொள்ளாதவராகக் காத்து வருபவரே நாட்டின் சிறந்த அமைச்சர்களாவர். 

    அத்தகையவர் இல்லையென்றால், அந்த நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம், அந்த நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து வேறு நாட்டுக்குச் சென்று அல்லற்படுவன ஆகிவிடும் என்பதைக் குறிக்கவே 'ஓம்புவார் இல்லெனில் சென்று படுமாம் உயிர்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment