பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 112                                                                                         இதழ் - ௧
நாள் : 16 - 06 - 2024                                                                     நாள் : ௬ - 0௬ - ௨௦௨௪


சங்ககால ஔவை (கி.பி 2)

     சங்க இலக்கிய நூல்களுள் பலராலும் அறியப்பட்ட நூல் புறநானூறு. தமிழர்களின் தொல்வரலாற்றை, கல்வியை, பொருளாதாரத்தை, ஆட்சிச் சிறப்பை அறிந்துகொள்ள உதவும் காரணிகளுள் புறநானூறு தனிச்சிறப்புடையது. அதில் ஒளவை பாடிய பாடலொன்று காணப்படுகிறது. ஒரு நிலமானது எப்போது மேன்மையுற்று விளங்கும் என்பதனை ஔவை,  அப்பாடலின் நான்கு அடிகளில் மிக நுண்மையாகவும் ஆழமாகவும் அனைவர் மனதிலும் பதியுமாறு சொல்கிறார். அதனைக் காண்போம்.

      ”  நாடா கொன்றோ காடா கொன்றோ
        அவலா கொன்றோ மிசையா கொன்றோ
        எவ்வழி நல்லவர் ஆடவர்
        அவ்வழி நல்லை வாழிய நிலனே ”
                                         - புறநானூறு, 187

அவல்   -   தாழ்ந்த நிலம், அதாவது பள்ளம்
மிசை    -   உயர்வான நிலம், அதாவது மேடு

   இப்பாடல்வழி ஔவை கூறுவது, அக்காலத்திற்கு மட்டுமல்ல  எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது எனில் அதில் வியப்பில்லை. பாடலின் பொருள் வருமாறு: நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் தாழ்ந்த நிலமாக இருந்தாலும் மேடான நிலமாக இருந்தாலும் எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய் நிலமே! என நிலத்தை வாழ்த்துவது போல் ஆடவர் பற்றிய கருத்தினைத் தெரிவிக்கிறாள்.

     இங்கு  'ஆடவர்' என ஔவை குறிப்பிடுவது ஆண்களை என்பது தெளிவாகத் தெரிகிறது. நல்ல பண்புடையவர்களாக ஆண்கள் இருக்கும் இடத்தில் எந்தத்  துன்பமும் வந்து சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதனை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளாள். ஒரு நிலத்து மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ்வதற்கு அடிப்படையாக அமைவது அந்நிலத்து ஆண்களது ஒழுக்கமே என்பதனை வலியுறுத்துகிறாள் எனலாம்.

     ஆடவர் என்பதனை ஆள்பவர் என்றும் எடுக்கலாம். இவ்வாறும் சில அறிஞர்கள் பொருள் கொண்டுள்ளனர். ஆள்பவராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒழுக்கம் அதாவது நற்பண்பு என்பது முக்கியமானது என்பதனை இப்பாடல்வழி அறிந்து கொள்ளலாம்.

    ஒழுக்கமுடையவர்களாக இருப்பதன் மூலம் நமக்கும் நமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாம் வசிக்கும் இடத்திற்கும் அந்த இடம் இருக்கும் நாட்டிற்கும் உறுதியாகப் பெருமை தேடி வரும். இது ஔவை சொன்ன மொழி இதனை வழியேற்று நடப்போம்.

வரும் கிழமையிலும் ஔவை வருவாள் . . . .

இவ்வகைச் சிறப்பு வாய்ந்த புலவர்கள் பற்றி வரும் கிழமைகளில் பார்க்கலாம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment