இதழ் - 127 இதழ் - ௧௨௭
நாள் : 29- 09 - 2024 நாள் : ௨௯ - ௦௯ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
நமக்குத் தெரிந்தவர் என்றோ, அறிந்தவர் என்றோ, ஒரு துறையில் சிறந்தவர் என்றோ ஒருவருக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது. அதுமட்டுமன்றி, அவர் அனைத்தும் அறிந்தவர் என எண்ணி அவரை மட்டும் உயர்வாகக் கருதக்கூடாது; ஒவ்வொருவரிடமும் தனித்தன்மையான சிறப்பு இருக்கிறது என்கிறார் ஔவையார். இதற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினைப் பார்க்கலாம்.
சோழ மன்னனது அவைக்களத்தில் கம்பர்,ஒட்டக்கூத்தர்,புகழேந்தி போன்ற புலவர்கள் அமர்ந்திருந்தனர். கம்பரது பாடல் ஒன்றினை, ஆஹா,ஓஹோ எனப் புகழ்ந்து கொண்டிருந்தான் சோழ மன்னன், அதனை மறுத்து, ஔவை பாடல் ஒன்றினைப் பாடினாள். அதைக் கேட்ட சோழன் மனம் வருந்தினான். பெருங்காவியம் இயற்றிய புலமையாளர் என்பதனால் அவரது திறமையைப் பாராட்டியதகக் கூறியபோது,
வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல் வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வான்று எளிது
என்ற பாடலைப் பாடினார்.
இப்பாடல் மூலம் சோழ மன்னனுக்கு மட்டும் அல்லாமல் நம் அனைவருக்கும் அறிவுரை கூறியுள்ளார் எனலாம். பாடலது கருத்து வருமாறு,
வான்குருவி எனச் சொல்லப்படும் தூக்கணாங்குருவியின் கூடு, குளவிகள் கட்டுகின்ற அரக்குக்கூடு, கரையானின் புற்று, தேனீக்களின் கூடு, சிலந்தியின் வலை இவற்றைப்போல எவராவது செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அதனால் அவர்களை மட்டும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் என்று பாராட்டலாமா? அதுமட்டுமன்றி, வேறு எதுவும் அந்தச் சிற்றினங்களுக்குத் தெரியாது. அது போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும். அதுதான் சிறப்பு. ஔவையின் வாக்கினை ஏற்றுக்கொண்டான் சோழன். நாமும் ஏற்றுக் கொள்வோம். தமிழின் சிறப்பை அறிவோம்.
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment