இதழ் - 133 இதழ் - ௧௩௩
நாள் : 10- 11 - 2024 நாள் : ௧௦ - ௧௧ - ௨௦௨௪
ஔவை ( கி.பி. 12 )
ஔவையின் தமிழ்ப்புலமைக்குச் சான்றாக இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ஔவைக்கும் இடைச் சிறுவனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; கேள்வி, பதில் வடிவில் நமக்குக் கிடைத்த தமிழ்ப் பொக்கிஷம் எனக் கூறலாம்.
தமிழ்ப்புலமை மிக்க அந்த இடைச் சிறுவனை முருகன் என்று பலர் கூறுகின்றனர். இடையனாக இருந்தாலும் தமிழ்ப்புலமை மிக்க ஒரு சிறுவனாக அவனை வைத்துப் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. புலமை அனைவருக்கும் பொதுவானது; அனைவருக்கும் சொந்தமானது.
ஔவையே! இனியது எது எனக் கூற முடியுமா எனக் கேட்ட அச்சிறுவனுக்கு ஔவை கூறிய பதில் மிக மிக கருத்தாழம் மிக்கதும் சுவைக்கத் தகுந்ததுமான பாடலாகும்.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!
அதாவது, மிகவும் இனிமையானது, தனிமையில் இருப்பதுதான்; அதைவிட இனிமையானது முதன்மையானதை வணங்குவது; இதைவிட இனிமையானது அறிவுடையவர்களுடன் சேர்ந்து வாழ்வது; அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவுடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.
பழந்தமிழகத்தில் அறிவுக்கும் அறிவுடையாருக்கும் இருந்த முக்கியத்துவத்தினை இப்பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக அருமையாக ஔவை கூறும் கருத்தானது அனைவரது புத்திக்கும் சென்று சேர வேண்டியது ஆகும். அதாவது அறிவுடையவர்களுடன் சேருதல் என்பது சேர்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதாகும். அதைவிட கனவிலும் நினைவிலும் அறிவுடையவர்களை காண்பது எனக் கூறுவது அவர்தம் அறிவுரைகளைச் சிந்திப்பதைப் பற்றிக் கூறியுள்ளார்.
நாமும் ஔவை சொல் கேட்கலாமா?
( வரும் கிழமையும் ஔவை வருவார் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment