பக்கங்கள்

இலக்கணம் கற்போம்



இதழ் - 46                                                                                   இதழ் -  
நாள் : 12-03-2023                                                                     நாள் : ௧௨-0-௨௦௨௩
 
   
 
 அளவை ஆகு பெயரின் வகைகள்
 
 
அளவை ஆகு பெயரின் வகைகள்
  • சொல்லாகு பெயர்
  • தானியாகு பெயர்
  • கருவியாகு பெயர்
  • காரியவாகு பெயர்
  • கருத்தாவாகு பெயர்
  • உவமையாகு பெயர்

சொல்லாகு பெயர்
  • சொல் பொருளுக்கு ஆகி வருவது சொல்லாகு பெயராகும்.
சான்று
  • தங்கை என் சொல்லைக் கேட்பாள்
சொல் என்னும் பெயர், கேட்பாள் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகி வந்ததால் சொல்லாகு பெயர் ஆகும்.


தானியாகு பெயர்
  • ஓர் இடப்பெயர் அவ்விடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயராகும். ஓரிடத்தில் உள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆகி வருவது தானியாகு பெயா் எனப்படும்.
சான்று
  • பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப் பொருள் ஏற்று என்னும் குறிப்பால் பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று.


கருவியாகு பெயர்
  • ஒரு கருவியின் பெயர் அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
சான்று
  • யாழ் கேட்டு மகிழ்ந்தாள்
யாழ் என்னும் இசைக்கருவியின் பெயர் அதனால் உண்டான இசைக்கு ஆகி வந்து யாழ் கேட்டு மகிழ்ந்தாள் என்றதனால் இது கருவியாகு பெயர் ஆயிற்று.


காரியவாகு பெயர்
  • ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகி வருவது காரியவாகு பெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
சான்று
  • அலங்காரம் படித்தேன்.
அலங்காரம் என்பது ஒரு காரியத்தின் பெயர். இங்கு அலங்காரம் என்பது அக்காரியத்தைக் குறிக்காமல் ஒரு நூலைக் குறித்து வந்துள்ளமையால் இது காரியவாகு பெயர் ஆகும்.



கருத்தாவாகு பெயர்
  • ஒரு கருத்தாவின் பெயர் அவரால் இயற்றப்பட்ட நூலுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.
சான்று
  • கம்பனைக் கற்றேன்.
இந்த எடுத்துக்காட்டில் கம்பன் என்பது கருத்தா ஆகும். ஆகையால் கம்பரைக் கற்க இயலாது மாறாக அவர் படைத்த நூலாகிய கம்பராமாயணத்தைக் கற்றேன் என்பதே இதன் பொருளாகும். கருத்தாவின் பெயர் அவர் செய்த நூலுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் ஆகும்.



உவமையாகு பெயர்
  • உவமானப் பெயர் தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகு பெயர் எனப்படும்.
சான்று
  • மயில் ஆடினாள்
மயில் ஆடியது என்று இருந்தால் அது பறவையைக் குறிக்கும். ஆனால் மயில் ஆடினாள் என்று வந்திருப்பதால் மயில் என்பது ஒரு பெண்ணுக்கு உவமையாக அமைந்துள்ளது. இவ்வாறு ஓர் உவமை பொருளுக்கு ஆகி வருவது உவமையாகு பெயர் ஆகும்.
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment