பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 110                                                                                            இதழ் - ௧௧0
நாள் : 02-06-2024                                                                          நாள் : 0௨-0௬-௨௦௨௪



உதயசந்திரன்

      நந்திபுர நகரத்தில் வைகிய நந்திவர்மனை பகைவேந்தர்கள் தாக்கினர். அப்போது பல்லவ சேனாதிபதியாகிய உதயசந்திரன் உருத்தெழுந்து, மாற்றார் சேனையைச் சின்ன பின்னமாக்கித் தன் மன்னனை விடுவித்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு தக்கக் காலத்தில் உதவி செய்து, காவலன் நன்றிக் குரியனாய் உதய சந்திரன் மாற்றாரைப் பின்னும் பல போர்க்களங்களில் வென்று பல்லவர் பெருமையைப் பாதுகாத்தான். அவ்வீரன், வேகவதி ஆற்றங்கரையிலுள்ள வில்லிவலம் என்னும் ஊரிற் பிறந்தவன். அவன் பெயரால் விளங்குவது உதயேந்திர மங்கலம் என்னும் ஊர். இப்பொழுது வட ஆர்க்காட்டுக் குடியாத்த வட்டத்திலுள்ள உதயேந்திரமே அவ்வூராகும்.

வயிரமேக வர்மன்

       தென்னாட்டில் நில வளத்தைப் பேணி வளர்த்த பல்லவ மன்னருள் ஒருவன் வயிரமேக வர்மன். பயிர்த் தொழில் சிறக்கும் வண்ணம் அவன் தொட்ட குளமும், வெட்டிய வாய்க்காலும் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தந்திவர்ம பல்லவனே வயிரமேகன் என்னும் விருதுப் பெயர் தாங்கி விளங்கினான் என்று சரித்திர நூலோர் கருதுவர். தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்திலுள்ள வயிரமேகபுரம் என்னும் ஊர் அவன் பெயரை விளக்குகின்றது. அவ்வூர் வயிர மேசு நகரம் என்று ஒரு சாசனத்தில் குறிக்கப்படுதலால் அதன் பண்டைச் சிறப்பினை ஒருவாறு அறியலாம். இடைக்காலத்தில் ஜனநாதபுரம் என்ற பெயரும் அதற்கு வழங்கலாயிற்று. இக்காலத்தில் வயிரபுரம் என்பது அதன் பெயர். 


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment