பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 24                                                                  இதழ் -
நாள் : 09-10-2022                                                     நாள் : ௦௯--௨௦௨௨

 
 
 ஆத்திசூடி (ஔவை)
 
பருவத்தே பயிர்செய்

உரை
     எந்தெந்தப் பயிர் எவ்வக்காலத்தில் விளையுமோ அவ்வக்காலத்தில் அந்தந்தப் பயிரினைப் பயிரிடுக.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 22

     உன்னாட்டிற் பொற்களந்தை யூரர்நன்னாட் செய்தபயிர்
     பொன்னே விளையப் புகழ்பெற்றார் – ஒன்னார்
     பயந்தி டுவேற் புன்னைவன பார்த்திவனே நீயுஞ்
     செயும்பருவத் தேபயிர் செய்


உரை
     பகைவர்கள் அச்சம்கொள்ளும் வேற்படையைக் கொண்டுள்ள புன்னைவனநாதன் என்னும் அரசனே! உன்னுடைய பாகை நாட்டு பொற்களந்தை என்னும் ஊரில் வாழும் பொற்களந்தையூரர் என்பவர் பயிர் விளையக் கூடிய தக்க பருவத்தில் செய்த பயிர் நல்ல விளைச்சலை அளித்து அவரது செல்வத்தைப் பெருக்கியது. அதுபோல நீயும் பயிர்செய்யும் காலமறிந்து பயிர்செய்வாயாக.

விளக்கம்
     உன்நாட்டில் – புன்னைவனநாதன் ஆண்ட ‘பாகை’ என்னும் ஊரில். கல்வியிலோ செல்வத்திலோ அதிகாரத்திலோ அனைத்திலுமோ செல்வாக்குடன் விளங்கும் ஒருவரை அவரது ஊர்ப்பெயர் அல்லது குடிப்பெயரால் அழைப்பது வழக்கம். சேக்கிழார் – குடிப்பெயர். நாமக்கல்கவிஞர், நாஞ்சில்நாடன் – ஊர்ப்பெயர். அங்ஙனம் பாகை நாட்டில் பொற்களந்தையூரில் சிறப்புடைய பெருமகனான ஒருவர் பொற்களந்தையூரர் என அழைக்கப்பட்டுள்ளார். அவர் காலமறிந்து பயிர்செய்யும் வேளாண் அறிவு மிக்கவர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலமறிந்து பயிர் செய்ததால் நல்ல விளைச்சல் பெற்று அவரது செல்வம் பெருகியது என்பதை “பொன்னே விளையப் புகழ்பெற்றார்” என்றார். செல்வத்தால் புகழ்பெற்றார் என்றும் காலமறிந்து செய்த தொழில்திறனால் புகழ்பெற்றார் என்றும் கொள்க. ஒன்னார் – பகைவர். பார்த்திவன் – அரசன், உலக மக்களால் விரும்பப்படுபவன். ‘பருவத்தே பயிர் செய்’ என்றது பயிர்த்தொழிலுக்கு மட்டும் ஆகாமல் செய்யும் வினை யாவற்றுக்கும் பொருந்துமாறு காண்க.

     “பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு” (குறள், 482) என்ற வள்ளுவரின் சொல்லும் இவண் ஒப்பிடத்தக்கது. காலமறிந்து செயலாற்றுதல் ஆன்றோரால் வலியுறுத்தப்படுகிறது. (இவ்வெண்பாவில் எடுத்துக்காட்டு கதை இல்லை).

கருத்து
     எவ்வக்காலத்தில் எச்செயலைச் செய்ய வேண்டுமோ அவ்வக்காலத்தில் அச்செயலைத் தவறாமல் செய்தல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 

No comments:

Post a Comment