இதழ் - 114 இதழ் - ௧௧௪
நாள் : 30 - 06 - 2024 நாள் : ௩0 - 0௬ - ௨௦௨௪
சோழ நாட்டு மன்னர்
வளவன் மாதேவி
பராந்தக சோழனுக்குப் பின்னர் அரசு புரிந்தவன் அவன் மைந்தனாகிய கண்டராதித்தன். 'ஈசன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்' என்று கருதி வாழ்ந்த இக்காவலனைச் 'சிவஞான கண்டராதித்தன்' என்று சாசனம் சிறப்பிக்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்து இறைவன்மீது இம்மன்னன் பாடிய திருவிசைப்பா சைவத் திருமுறைகளுள் ஒன்பதாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்.
அவ் இசைப்பாட்டில்,
"காரார் சோலைக் கோழிவேந்தன் தன் தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன்"
என்று வருதலால், அரசாளும் பெருங்குலத்திற் பிறந்தும் அரனடியே தஞ்சமெனக் கருதிய சீலன் இவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சி நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் என்னும் ஊர், இவன் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலம். இம்மன்னனது மறுமை நலங்கருதி அம்மங்கலம் நிறுவப்பட்டதாகத் தெரி கின்றது. இன்னும், கண்டராதித்தன் பெயரால் நிலவும் ஊர் ஒன்று தென்னார்க்காட்டுத் திருக்கோவிலூர் வட்டத்தில் உண்டு. கண்டராதித்தபுரம் என்று பெயர் பெற்ற அவ்வூர் இந்நாளில் கண்டராச்சிபுரம் என்று வழங்கும். தென்னார்க் காட்டிலுள்ள கண்டமங்கலமும் கண்டராதித்த மங்கலமாய் இருத்தல் கூடும். அங்ஙனம் இம்மையிலும் மறுமையிலும் செம்மையே நாடிய இம்மன்னரின் திருவுருவம் கோனேரி ராஜபுரம் என்னும் திருநல்லத்துக் கோவிலில் இன்றும் காணப்படுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment