பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 25                                                                                    இதழ் -
நாள் : 16-10-2022                                                                       நாள் : ௧௬ - ௧௦ - ௨௦௨௨

 
மயங்கொலிகள்
 
     உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம். எழுத்துகளை உச்சரிக்கும்பொழுது ஏறத்தாழ ஒன்றுபோலவே ஒலிக்கின்றன. ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.

மயங்கொலி எழுத்துகள்
  • ண, ன, ந
  • ல, ழ, ள
  • ர, ற
     ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும். எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
 
சான்று
  • முதல் - நன்மை, நாணம்.
  • இடை - மந்தி, நண்டு, சென்று, சுற்று, பார்த்து, புகழ்வது, வெல்வது, கொள்வது.
  • கடை - மண், அவன், பார், சொல், மகள், புகழ்.

பிழைகளைத் தவிர்க்க
     எழுத்துகளை அதன் உச்சரிப்புமுறையைத் தெளிவாக உச்சரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ந, ண, ன / ல, ழ, ள / ர, ற ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒருவரின் தாய்மொழி ஆளுமை வெளிப்படும். தமிழ்மொழியில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.

சான்று
 
மனம் - மணம் 
  • இரண்டு சொற்களும் உச்சரிக்கும் பொழுது ஏறத்தாழ ஒன்றுபோலவே ஒலிக்கின்றன. ஆனால் பொருள் வேறுபாடு உண்டு.
  • பேசும்பொழுது பூ மணம் வீசியது என்றும், எழுதும்பொழுது பூ மனம் வீசியது என்றும் எழுதுவது மயங்கொலிப் பிழை எனப்படுகிறது.
 
ண, ன, ந எழுத்துகள் ஒலிக்கும் முறை
  • ”ண” - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
  • ”ன” - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
  • ”ந” - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
 
ல, ள, ழ எழுத்துகள்
  • ”ல” – நா (நாவின் இரு பக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ எழுத்திற்கு முன் இருப்பதால் வகர லகரம் என்கிறோம்.
  • ”ள” - நா (நாவின் இரு பக்கங்கள்) தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது 'ன' எழுத்திற்கு முன் இருப்பதால் 'னகர ளகரம்' என்கிறோம்.
  • ”ழ” - நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருவதால் ழகரம் தோன்றும். ‘ழ’ எழுத்து தமிழ்மொழிக்கு மட்டுமே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.
 
ர, ற எழுத்துகள்
  • “ர“ - நாவின் நுனி மேலண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
  • ”ற” - நாவின் நுனி மேலண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020 

 

No comments:

Post a Comment