பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 43                                                                                        இதழ் -
நாள் : 19-02-2023                                                                          நாள் : -0௨-௨௦௨௩ 
 
  
 
ஆகுபெயர்
 
    ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
 
    “ பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி
     கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
     ஒன்றன் பெயரான் அதற்கு இயைபிறிதைத்
     தொல்முறை உரைப்பன ஆகுபெயரே”    
                         - நன்னூல், நூற்பா. எண். 290
 
    பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்காலம் முதல் சொல்லப்பட்டுவருவன ஆகுபெயர் ஆகும்.

சான்று
  • வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.
    இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது.

ஆகுபெயரின் வகைகள்
 
 
ஆகுபெயர் 16 வகைப்படும்.
  • பொருளாகுபெயர்
  • இடவாகுபெயர்
  • காலவாகுபெயர்
  • சினையாகுபெயர்
  • பண்பாகுபெயர்
  • தொழிலாகுபெயர்
  • எண்ணலளவை யாகுபெயர்
  • எடுத்தலளவை யாகுபெயர்
  • முகத்தலளவை யாகுபெயர்
  • நீட்டலளவை யாகுபெயர்
  • சொல்லாகுபெயர்
  • தானியாகுபெயர்
  • கருவியாகுபெயர்
  • காரியவாகுபெயர்
  • கருத்தாவாகுபெயர்
  • உவமையாகு பெயர்
 
    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment