பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 101                                                                                                இதழ் - 0
நாள் : 31-03-2024                                                                                நாள் : -0-௨௦௨


பராக்கிரம பாண்டியன்

     பாரத நாட்டில் இந்துக்கள் போற்றும் புண்ணியத் தலங்களுள் தலைமை சான்றது காசியாகும். இத்தகைய காசியைத் திசை நோக்கித் தொழுத பழந்தமிழர் தமது நாட்டில் அப்பதியின் பெயரைச் சில ஊர்களுக்கு அமைத்துள்ளனர். சிவகாசி, தென்காசி முதலிய ஊர்கள் வடகாசியை நினைவூட்டுவனவாகும். தென்பாண்டி நாட்டில் தென்காசியைச் சிறக்கச் செய்தவன் பதினைந்தாம் நூற்றாண்டில் அரசு செலுத்திய பராக்கிரம பாண்டியன். சிவநேயச் செல்வனாகிய அம்மன்னன் கங்கைக் கரையில் உள்ள காசி விசுவநாதரின் கோலத்தைச் சித்திரா நதிக்கரையிற் கண்டு வணங்க ஆசைப்பட்டு, அங்கு விசுவநாதர் கோயிலைக் கட்டினான். திருப்பணி முற்றுப் பெறுவதற்குப் பதினேழு ஆண்டுகள் ஆயின என்று சாசனம் கூறுகின்றது. தென்காசியில் கோயில் கொண்ட விசுவநாதர் பெயரால் அம்மன்னன் பெரியதோர் ஏரியும் வெட்டச்செய்தான். அந்த ஏரி விசுவநாதப் பேரேரி என்று பெயர்பெற்றது. இன்றும் அவ்வேரி அம்மன்னன் பெயரால் வழங்கக் காணலாம். இன்னும் விந்தனூர் முதலாய ஐந்து ஊர்களில் அவ்வரசன் அகரங்கள் அமைத்து அந்தணரைப் பேணிய செய்தி கல்வெட்டுகளால் அறியப்படும். அவ்வகரங்கள் ஒன்று மேலகரம் என்னும் பெயரோடு இன்றும் தென்காசிக்கு அருகே நின்று நிலவுகின்றது. சிவபக்திச் செல்வமும். செந்தமிழ்ப் புலமையும் வாய்ந்த அம்மன்னன் தென்காசித் திருப்பணி குறித்துப் பரிவுடன் பாடிய பாட்டு அன்பர் உள்ளத்தை உருக்குவதாகும். 

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment