இதழ் - 118 இதழ் - ௧௧௮
நாள் : 27- 07 - 2024 நாள் : ௨௭ - 0௭ - ௨௦௨௪
அதியமானின் மகனான ‘பொகுட்டெழினி’ மேல் ஔவையார் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதியர் குடி மன்னன் ஒருவன் வானத்து அமிழ்தம் போன்ற கரும்பைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிட்டான். எழினி அவன் மரபில் வந்தவன்; பொகுட்டு என்பது பூமொட்டு; பூவினுடைய மொட்டுப் போல அழகாக இருப்பவன் என்பதனால் அவனைப் பொகுட்டெழினி என்றனர். அதுவே கடைசிவரை வழங்கலாயிற்று.
பொகுட்டெழினியை ஔவை சிறப்பிக்கும் விதமாக,
எருதே இளைய; நுகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?' என, உமணர்
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே.
( புறநானூறு 102 )
அதாவது,
இளம் எருதுகள் நுகத்தடியில் பூட்டப்படாதவை. வண்டியில் பண்டங்கள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. போகும் வழியில் வண்டி பள்ளத்தில் இறங்கி; மேட்டில் ஏற வேண்டியதாக இருக்கலாம்; வழி எப்படி இருக்கும் என்பதை யார் அறிவர் என்று எண்ணி உப்பு வணிகர்கள் (உமணர்) தங்கள் வண்டியின் அடியில் கட்டிய சேம அச்சு போன்றவனே! விளங்கும் புகழும், ஈவதற்காக கவிழ்ந்த கையும் உடைய உயர்ந்தோனே! நீ முழுமதி போன்றவன். உன் நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது.
வரும் கிழமையும் ஔவை வருவாள்......
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment