பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 18                                                                      இதழ் -
நாள் : 28-8-2022                                                          நாள் : --௨௦௨௨
 
 
 
 
பழமொழி – 18
 
'அறிவினை ஊழே அடும்'
 
     அறிவுடைய சான்றோர்கள், சில நேரங்களில் தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். அது அச்சான்றோர்களின் ஊழ்வினைப் பயனே என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
 
     சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
     பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட
     பொறியின் வகைய கருமம்; அதனால்,
     'அறிவினை ஊழே அடும்'.


     உலகோர் சிறப்பாகப் போற்றக் கூடிய சான்றோர்கள், சில நேரங்களில் அறிந்தே தவறான செயல்களில் ஈடுபடலாம். அச்செயல்கள் தவறென உணர்ந்தாலும் அதை அவா்களால் கட்டுப்படுத்த இயலாது. இதற்கு அவர்களின் ஊழ்வினையும் ஓர் காரணம் என்பதையே 'அறிவினை ஊழே அடும்' என்று இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.  (பொறி – தலையெழுத்து)
 
இதனை திருவள்ளுவர் "ஊழ்வினை" என்ற அதிகாரத்தில்,

     ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினும் தான் முந்துறும்                (குறள் – 380)

 
     என்று கூறுகிறார். ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும் என்று மு. வரதராசனார் இக்குறளுக்குப் பொருள் தருகிறார்.
 
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment