இதழ் - 193 இதழ் - ௧௯௩
நாள் : 01 / 03 / 2026 நாள் : 0௧ / 0௩ / ௨௦௨௬
துர்வாசரின் வழிகாட்டுதலில் திருவைந்தெழுத்தோதி மந்திரசித்தி பெற்ற கல்லுண்ட முனிவரான சிலாதர் துர்வாசரை அணுகி நன்றி தெரிவித்து சில ஐயங்களை வினவி தெளிவு வேண்டினார்.
துர்வாசர், நரகத்திற்குக் காரணமான அனைத்து பாவங்களையும் போக்கும் திருவையாற்றில் தங்கியிருந்து இறையருளுக்கு என்றும் பாத்திரமாகுமாறு சிலாதரை வாழ்த்தினார். அவரது வாழ்த்தைக் கேட்ட சிலாதர் பாவங்களையும் நரங்களையும் குறித்து தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். எனவே துர்வாசரிடம், “ஐயனே! பாவங்களையும் அதனால் விளையும் நரககதிகளையும் அறிந்துகொள்ள விழைகிறேன். எடுத்துரைத்து அருள வேண்டும்” என்று வேண்டிநின்றார்.
துர்வாசர் அவருக்கு பலவிதமான பவங்களைப் பற்றிய செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார். அப்பாவங்களால் ஏற்படும் நரகத்துன்பங்களையும் விவரித்தார். அவை திருவையாற்றுப் புராணத்தின் (பஞ்சநதமான்மியம்) ஒன்பதாவது அத்தியாயமான பஞ்சநதமென்று பெயர்பெற்ற அத்தியாயத்தில் விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாவங்களின் வகையையும் விளைவுகளையும் செவிமடுத்த சிலாதர் அவற்றிற்கான கழுவாய்களையும் அருளவேண்டும் என்று துர்வாசரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். “சிவாலயங்களில் பன்னிரண்டு ஆண்டுகாலம் இருந்து பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும். திருவையாற்றில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து பிராயச்சித்தம் செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கி இறையருளுக்குப் பாத்திரமாகலாம்” என்றார்.
“சுவாமி பிராயச்சித்தங்களையும் அருளவேண்டுமே” என்று சிலாதர் கேட்க அவற்றையும் துர்வாசர் வெளிப்படுத்தினார். “பிராயச்சித்தம் என்பது, நாளின் மூன்று வேளை காவிரியில் நீராடுதல், நூற்றெட்டு வீதிவலம் வருதல், ஐயாற்றுக் கோயிலில் நூற்றெட்டு சர்வாங்க வணக்கம், பிச்சையுற்று ஒருவேளை மட்டும் உண்ணுதல், இரவுபகல் சோம்பல் உறக்கமின்றி நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் முறை திருவைந்தெழுத்தை ஓதுதல் இவையே பிராயச்சித்தங்கள். இவற்றைச் செய்யும் ஆற்றல் இல்லாதவர்கள் தங்கள் மரணத் தருவாயில் இத்தலத்திற்கு வந்து தங்கியிருத்தல் வேண்டும்” என்றார்.
துர்வாசர் அதுகாறும் கூறிய செய்திகளைக் கேட்ட சிலாதருக்கு தாம் இவற்றில் எந்தப் பாவமும் செய்யவில்லை என்று உள்ளத்தில் மகிழ்ச்சி எழுந்தது. அடுத்தநொடி ஏதோ சிந்தனை உள்ளத்தில் எழ “ஐயனே! புன்னாம நரகம் என்று சொன்னீர்களே அது குறித்து மீண்டும் ஒருமுறை அடியேன் தெளிவுபெறுமாறு கூறியருள வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.
“புன்னாம நரகம் என்பது மேலும் கீழும் தாம்பரச் சுவாலை உடையது. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் தேவர்களின் நூறாண்டு அதிலிருந்து துன்பப்பட வேண்டும். பிள்ளைப் பேறு வாய்க்கப் பெற்றவர்கள் பன்னாம நரகத்திற்குச் செல்வதில்லை” என்றார்.
துர்வாசரின் மொழிகேட்டு நடுங்கிப்போனார் சிலாதர். விழிநீர் பெருக “ஐயனே! தங்கள் அருளால் வேறெந்த நரகத்தையும் நானடைய மாட்டேன். புன்னாக நரகத்தை மட்டும் நானடையாதிருக்க தாங்கள் அருள வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
“சிலாத முனிவரே! புன்னாக நரகத்திற்கு நீர் அஞ்சுகிறீர் என்றால் நன்னங்கை ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தை மேற்கொண்டு வாழுங்கள்”
“ஐயனே! எனக்கு தாய் தந்தை குரு என அனைத்தும் தாங்கள் ஒருவரே. தாங்களே எனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று சிலாதர் துர்வாசரின் திருவடி பணிந்தார்.
சிலாதரின் அன்பால் மகிழ்ந்த துர்வாசர் அவரைத் தொட்டுத்தூக்கி அணைத்துக் கொண்டார். “என்னோடு வா” என்று சிலாதரை அழைத்துக் கொண்டு எங்கோ சென்றார். இருவரும் சோலை நடுவிலிருந்த ஓர் ஆசிரமத்தை அடைந்தனர். யாருடைய ஆசிரமம் இது? இங்கு எதற்கு துர்வாசர் தன்னை அழைத்து வந்தார் என்று குழம்பி நின்றார் சிலாதர்.
இன்னும் அறிவோம்…
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment