இதழ் - 195 இதழ் - ௧௯௫
நாள் : 22 / 03 / 2026 நாள் : ௨௨ / 0௩ / ௨௦௨௬
“ஐயனே! புன்னாம நரகத்திற்கு அஞ்சி தங்கள் வழி நடந்த எனக்கு இன்னும் அந்நரகத்தின் அச்சம் நீங்காதபடிக்கு வினை துரத்துகிறது. திருமணமாகி இவ்வளவு காலங்கடந்தும் நன்மக்கட்பேறு வாய்க்காமல் அல்லலுறுகிறேன். எனது கலக்கத்தைத் தாங்களே போக்க வேண்டும். வழிகாட்டுங்கள் ஐயனே” என்று துர்வாசரின் பாதங்களில் தலைவைத்து கண்ணீர் உகுத்தார் சிலாதர்.
“சிலாதரே! கலங்காதீர்கள். எழுந்திருங்கள்” என்ற அவர் மெய்தொட்டு தூக்கி அருகமர்த்திக் கொண்டார். சிலாதரின் கண்களில் தெரிந்த கலக்கம் துர்வாசரின் ஈரநெஞ்சை வாட்டியது.
“சிலாதரே! சிவனது அருள்பெற்ற தாங்கள் இங்ஙனம் கலங்குவது தகுதியுடையதா. யாராலும் எளிதில் அடைய இயலாத ஐந்தெழுத்து மந்திர சித்தியைப் பெற்றவர் தாங்கள். தாங்கள் கலங்கலாமா?” சற்று இடைவெளிவிட்டு “எனது சீடன் கலங்கலாமா?” என்றார் துர்வாசர். அச்சொற்கள் செவிபுகுந்ததும் வெடித்து அழுதார் சிலாதர். இன்னும் குழந்தையாகவே இருக்கும் தன் சீடனை கண்டு புன்னகைத்த துர்வாசர் ‘அழட்டும்’ என்று விட்டுவிட்டார். நோக்கமின்றி கற்கப் புகுந்தவனின் விசை சிறிது சிறிதாக ஓய்வது போல சிலாதரின் அழுகையும் தேய்ந்து ஓய்ந்தது.
“சிலாதரே! உள்ளத்தில் அலை ஓய்ந்திருக்கும். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றவுடன் கவனமானார் சிலாதர்.
“தவம் செய்க” ஆணைபோல் பிறந்து வந்தன துர்வாசரின் சொற்கள்.
வழிகிடைத்தது என்று குருவின் அடிபணிந்து ஐயாற்று அப்பரின் அருள்வேண்டி காவிரியின் தென்கரையிலிருந்த அரசமரப் பீடம் நோக்கிச் சென்றார். வழிமூடி ஊழ்கத்தில் ஆழந்தார். முறைப்படி வழிபாடுகளை நிகழ்த்தினார். மந்திரமும் தந்திரமுமானவரை மந்திரத்தாலும் தந்திரத்தாலும் வழிபட்டார். சாருலட்சணை கணவரின் தவத்திற்கு உற்ற துணையானார். காலம்சென்று கொண்டே இருந்தது. தவம் கனிந்தது. சிவபெருமான் சிலாதரின் உள்ளத்தில் தோன்றி திருவையாற்றின் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி “உழுக” என்று ஆணையிட்டுக் கரந்துறைந்தார்.
சாருலட்சணையை அழைத்துக்கொண்டு துர்வாசரிடம் விரைந்தார் சிலாதர். நடந்தவற்றைச் சொன்னார். காலத்தைக் கணித்து நற்பொழுதைக் குறித்தார் துர்வாசர். உரிய பொழுதில் நிலத்தை உழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருவையாற்றின் கிழக்குத் திசையில் காவிரி கரையோராமாக துர்வாசர், சிலாதர், சாருலட்சணை, வசிஷ்டர், ஏனைய தவச்சீலர்கள் அங்கு குழுமியிருந்தனர். யாழ்மீட்டி பண்ணும் பதமேழும் கொண்டு ஐயாற்றானை வழிபட வந்த விஞ்சையர்களும் என்ன நடக்கிறது என்று நின்று கண்டனர்.
சிலாதர் உழுவையை எடுத்தார். ஏற்றில் பூட்டினார். உழுவையின் நுதி பொன்னால் கட்டப்பட்டிருந்தது. “போற்றி ஓம் நமசிவாய” என்று துர்வாசரின் குரல் எழுந்து ஒலித்தது. நமசிவாய நமசிவாய என்று அங்கிருந்த அனைவரின் உளநாவும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது. சிலாதர் நமசிவாய என்று சொல்லி நுதியை நிலத்தில் ஆழ ஊன்றினார். ஏற்றை “ஹை” என்று சொல்லி கோல்கொண்டு தட்டினார். ஏறு எட்டுவைத்து நடந்தது. நுதி நிலத்தைப் பிளந்து கொண்டு சென்றது. ஏறு நிலத்தை வட்டமாக மும்முறை வலம்வந்தது. சிலாதர் உழுவையை பலங்கொண்டு அழுத்தினார். நுதி இன்னும் இன்னுமென ஆழமாகச் சென்றது. வடக்கிலிருந்து கிழக்குப் பக்கமாக திரும்பும்பொழுது ஏறு நின்றது. “ஹை” என்றார் சிலாதர். ஏறு கால்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி வைத்தது. “ஹை ஹை” என்றார் சிலாதர். ஏறு உழுவையை இழுக்கத் தடுமாறியது. சிலாதர் குனிந்து கவனித்தார். நுதி மண்ணடியில் எதிலேயோ மாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். உழுவையை தூக்கி நகர்த்தி வைத்துவிட்டு மண்ணைப் பறித்து எடுத்தார். மாணிக்கப் பேழை ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. திரும்பி துர்வாசரைப் பார்த்தார். துர்வாசரின் கண்களும் அகலவிரிந்தன. சாருலட்சணையும் ஓடி வந்தார். சிலாதர் பேழையை வெளியே எடுத்துத் திறந்தார். உள்ளே ஒரு பச்சிளங்குழந்தை பட்டுத்துகிலில் படுத்திருந்தது. அங்கு நின்றிருந்தவர்கள் மட்டுமல்ல. விஞ்சையர்களும் "சிவ! சிவா!" என்று பெருங்குரலெடுத்தனர்.
(தேவார மொழி தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment