இதழ் - 179 இதழ் - ௧௭௯
நாள் : 19 - 09 - 2025 நாள் : ௧௯ - ௧௦ - ௨௦௨௫
பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்
பக்திக் கொள்கையால் தவறவிட்ட பேறு
பெரியசாமித் தூரன் அவர்களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், இசையாளுமைகள், அரசியல் தவைலர்கள், பொருளாதார நிபுணர்கள், அறிவியல் விற்பன்னர்கள் போன்றோருடன் தொடர்பிருந்ததைப் போலவே பல்வேறு மரபுகளைச் சேர்ந்த துறவிகளுடனும் தொடர்பிருந்ததை அவர்தம் நினைவுக் குறிப்புகள் காட்டுகின்றன. சான்றாக சுவாமி சித்பவானந்தர், புரவிபாளையம் கோடி சுவாமிகள், வடகுமரை அப்பண்ணா சுவாமிகள், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி இறையுடன் கலந்தபோது அவரைக் காணும் பேறு தமக்கு வாய்க்கவில்லை என்று வருந்தியவர் தூரன். அக்குறையைப் போக்கிக் கொள்ள புதுச்சேரியில் வாழும் யோகி அரவிந்தரின் திருக்காட்சியைப் பெற்றுவிடவேண்டும் என்று விரும்பினார் பாரதி தமிழ் கொடுத்த நமது தூரன். ஆனால் அரவிந்தர் ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே வெளியுலகிற்கு திருக்காட்சி அருள்வது வழக்கம். அந்த நாட்கள் தூரனுக்கு நினைவில் இல்லை. எனவே புதுச்சேரி வாழ் கவியோகி சுத்தானந்த பாரதியாரிடம் கடிதம் மூலம் இதுகுறித்து வினவினார். கவியோகியிடமிருந்து பதிலும் வந்தது. ஒருநாள் பிந்தைய தேதியைக் குறிப்பிட்டுவிட்டதால் அரவிந்தரின் திருக்காட்சி தூரன் அவர்களுக்கு வாய்க்காமல் போனது. இறைவனின் ஆணை இதுதான்போல என்று தன்னைத் தேற்றிக் கொண்டார்.
ரமணரையோ அரவிந்தரையோ தூரன் அவர்கள் தேடிச் சென்றுதான் வழிபட்டிருக்க இயலும். அவர்களது திருக்காட்சியும் வாய்மொழிகளும் கொண்டு மகிழும் பேறு வாய்க்காமல் போனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வித்யாலயத்தில் தன்னுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு துறவியுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பிருந்தும் பழகாமல் தவறவிட்டதைத் தனது நினைவுக் குறிப்புகளில் தூரன் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். அதற்கு அந்த இளமைக்காலத்தில் தான் கொண்டிருந்த பக்திக் கொள்கை காரணமாயிற்று என்பது அவரது சொல். யார் அந்தத் துறவி?
சுவாமி சித்பவானந்தர்தான் அவர் குறிப்பிட்ட துறவி. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர். கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் படித்தவர். பட்டப் படிப்பு நிறைவடையும் முன்னரே ஆன்மீக எழுச்சி ஏற்பட்டு ராமகிருஷ்ண மரபில் துறவியானவர். திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனம் அமைத்து ஆன்மீகப் பணியையும் சமூகப் பணியையும் மேற்கொண்டவர். பல்நூறு இளைஞர்களுக்கு ஆன்மீக எழுச்சியுண்டாகக் காரணமானவர். கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பல ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அவருடன் பணியாற்றியும் அவரது சத்சங்கத்தைத் தாம் பெறும்பேறு வாய்க்கவில்லை என்று தூரன் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.
“இப்படிப்பட்ட பெரும் துறவியின் நிழலில் நான் பல ஆண்டுகள் பணி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அக்காலத்திலேயே சமயப் பற்றுக் கொண்டிருந்த நான் வித்யாலயப் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தியதால் நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டேன்” என்பது தூரனின் நினைவுச் சொற்கள்.
அக்காலத்தில் சுவாமி சித்பவானந்தர் வித்யாலயத்தில் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுவாராம். பல நீதிகளை எடுத்துக் கதைபோலச் சுவையோடு சொல்லுவாராம். சுவாமி சித்பவானந்தரின் கதைத் தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. வித்யாலய பணிகளில் மூழ்கிவிட்டதால் இத்தகு சிறப்புடைய சுவாமி சித்பவானந்தருடன் நெருங்கிப் பழகத் தவறிவிட்டேன் என்று தூரன் அவர்கள் வருத்தப்பட்டார் அல்லவா. அது மட்டுமல்ல காரணம். மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. என்ன அது?
வித்யாலய நினைவுகள் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment