பக்கங்கள்

பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்

இதழ் - 173                                                இதழ் - ௧
நாள் : 07 - 09 - 2025                            நாள் : 0 - ௨௦௨




பெரியசாமித்தூரனின் நினைவுகளில் வித்யாலயம்

ஐயாவின் உத்தரவும் ஊழியர்களின் கலக்கமும்

    ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் காந்தியடிகளின் அன்பரான தி.சு. அவினாசிலிங்கம் ஐயா அவர்களால் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதன் கொள்கையால் ஈர்க்கப்பட்டுதான் பெரியசாமித் தூரன் அவர்கள் மிக மகிழ்ச்சியோடு வைரவிழாப் பள்ளி ஆசிரியப் பணியைத் துறந்து வித்யாலயப் பணிக்கு வந்தடைந்தார். அவரது அர்ப்பணிப்புள்ள கல்விப்பணி வித்யாலய வளர்ச்சியில் துணை நின்றுள்ளது என்பது வரலாறு. அத்தகைய தொண்டுள்ளம் கொண்ட பெருமக்களால் வித்யாலயம் நடைபெற்று வந்தது.

   ஐயா அவர்கள் செயலில் ஆர்வமும் ஊக்கமும் கண்டிப்பும் உடையவர். வித்யாலயத்தின் கல்வித் தொண்டுக்காக அவர் அனைத்து ஊழியர்களிடமும் முழுமையான அர்ப்பணிப்பை எதிர்பார்த்தார். அது சில பொழுதுகளில் அனைத்து ஊழியர்களுக்கும் இயலாததாக இருந்துள்ளது. பல்வேறு காரணங்கள் அதற்கு உண்டு. முக்கியமான காரணம் குடும்பக் கடமைகள். இப்படியான ஒரு நிகழ்ச்சியை தூரன் அவர்கள் நினைவுகூர்ந்து பதிவுசெய்துள்ளார். 

       விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். போராட்டங்களை ஐயா அவர்கள் தலைமைதாங்கி நடத்தும் தன்மையர். அதனால் சிறைசெல்லும் நிலைமை அவருக்கு ஏற்படும். ஒருமுறை காந்தியடிகள் அறிவித்த போராட்டத்தை ஐயா அவர்கள் தலைமையேற்றி நடத்தினார். அதனால் சிறைவாசம் தனக்கு உறுதி என்று கணித்தார். தனது சிறைவாசத்தால் வித்யாலயப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதியவர் ஊழியர்களை அழைத்து தனக்கு சிறைவாசம் கிடைக்கவுள்ள செய்தியைச் சொல்லி அக்காலத்தில் வித்யாலயத்தை எங்ஙனம் நடத்தவுள்ளீர்கள் என்று வினவினார்.

       ஊழியர்களிடத்தில் சற்று குழப்பம். ஐயா சிறைசெல்வது அவ்வப்பொழுது நடக்கும் ஒன்றுதான். அக்காலங்களிலும் வித்யாலயம் நல்லமுறையிலேயே இயங்கியுள்ளது. ஐயா அவர்கள் திடீரென்று இப்படிக் கேட்கிறாரே, ஏனென்று தெரியவில்லையே என்று நினைத்த ஊழியர்கள் குழப்பமடைந்தனர். ஊழியர்களிடமிருந்து தன் உள்ளத்திற்குகந்த விடையொன்றும் வாராததால் ஐயா அவர்களே ஒரு செய்தியைப் பகிரத் தொடங்கினார். அதனை ஓர் உத்தரவு என்றும் கூறலாம். தூரன் அவர்கள் ஐயாவின் சொற்களை இங்ஙனம் பதிந்துள்ளார்.

      “நீங்கள் உங்களுக்குள் ஏற்பாடு செய்துகொண்டு ஒவ்வொரு ஊழியரும் ஒவ்வொரு மாதம் வேறெங்கும் போகாமல் வித்யாலயத்திலே இருக்க வேண்டியது. அப்பொழுதுதான் வித்யாலயத்தின் குறிக்கோளும் நோக்கமும் உயரும்”

     இந்த உத்தரவு அங்கிருந்த ஊழியர்களிடத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒருமாதம் முழுவதும் குடும்பத்தைக் கவனியாமல், மனைவி மக்களைப் பார்க்காமல் எப்படி சமாளிப்பது என்பதே அவர்களின் முதற்கலக்கம். அப்பொழுது தூரன் அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப்பில் இருந்துள்ளார். அவருக்கும் ஐயா அவர்களின் உத்தரவு கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஐயா அவர்கள் ஏன் இங்ஙனம் உத்தரவிட வேண்டும் என்று அவருக்கும் புரியவில்லை. சுவாமி ஹ்ருஷிகேசானந்தர் அவர்கள் அப்பொழுது வார்டனாக இருந்துள்ளார்கள் என்பது தூரனின் நினைவு. வித்யாலய ஊழியர்கள் யாரும் இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. ஆனால் ஐயா அவர்களிடம் எப்படித் தெரிவிப்பது என்றும் புரியாமல் தவித்தனர். 

     வித்யாலய ஊழியர்களில் ஒருவரான பட்டாபிராமன் என்பவர்தான் ஐயா அவர்களிடம் தனது கருத்தை தைரியமாகத் தெரிவித்தார். குடும்பத்தில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவரது சொற்கள் காட்டின. பின்னர் சிலரும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஐயா அவர்களிடம் தங்கள் கருத்தை முன்வைத்தனர். ஐயா அவர்கள் இத்தனை தொல்லைகளும் குடும்பக் கடமைகளும் இதற்குப் பின்னால் இருக்குமென எதிர்பார்க்கவில்லை. ஒருமாதகாலம் வித்யாலயத்தில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு ஒருவாரகாலம் என்று குறைக்கப்பட்டது. ஊழியர்கள் வார்டன் சுவாமிகளின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து வித்யாலயத் தொண்டில் ஈடுபட்டனர்.     


வித்யாலய நினைவுகள் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment