பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 19                                                                     இதழ் -  
நாள் : 04-09-2022                                                      நாள் : ௦௪-௦௯- ௨௦௨௨
 
 
   

 முல்லை நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்

காவு

      கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு என்றும் வழங்கப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செங்கோட்டையில் ஆயிரங்காவு என்று வழங்கப்படும் ஊர் உள்ளது. தொண்டை நாட்டில் வைணவத் திருத்தலமான திருதண்கா ஊரும் அமைந்துள்ளது.

பொழில்

      மரங்களும் செடி கொடிகளும் வளர்ந்து செழித்தோங்கிய பகுதிக்குப் பொழில் என்று பெயர். ஆல மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ள பகுதி திருவாலம் பொழில். குற்றாலத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊர் பைம்பொழில் ஆகும். அவ்வூர் இன்று மருவி பம்புளி என்று வழங்கப்பட்டு வருகிறது.

தண்டலை

      சோலையைக் குறிக்கும் மற்றொரு சொல் தண்டலை. அது தண்டரை, தண்டலம் எனவும் அழைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளியின் அருகிலுள்ள ஊர் குழித்தண்டலை. இன்று குழித்தலை என மருவி வந்துள்ளது. தொண்டை நாட்டில் பூந்தண்டலை, பழந்தண்டலை, பெருந்தண்டலம் ஆகிய ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் சோலைகள் சூழ்ந்த ஊர்களாக இருப்பதை அறியமுடிகிறது.

சோலை

      சோலை என்னும் பெயரிலும் ஊர்கள் வழங்கி வந்துள்ளன. திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை, சேலம் நாட்டில் தலைச்சோலையும் திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலையும் அமைந்துள்ளன.

தோப்பு

      மரங்கள், செடிகள் தொகுதியாக வளரும் இடம் தோப்பு என்று வழங்குவர். இந்தத் தோப்பின் அடிப்படையில் சில ஊார்கள் அமைந்துள்ளன. நெல்லை நாட்டில் மந்தித்தோப்பு, இராமநாதபுரத்தில் மான்தோப்பு, தஞ்சை நாட்டில் நெல்லித்தோப்பு, தென்னாற்காட்டில் வௌவால்தோப்பு முதலிய தோப்புகள் நிறைந்துள்ள ஊர்களாகும்.

( ஊர்ப்பெயர்களின் பெருமைகளைத் தொடர்ந்து அறிவோம் . . . )
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment