பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 28                                                            இதழ் - ௨௮
நாள் : 05-11-2022                                               நாள் : 0 - ௧௧ - ௨௦௨௨

 

ஆத்திசூடி வெண்பா – 26
 
ஆத்திசூடி (ஔவை)
இளவம்பஞ்சில் துயில்
உரை
          இளவம்பஞ்சினாலாய மெத்தையில் உறக்கம் கொள்க.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 26
         அன்னத்தின் தூவி கோங்காகும் அரசர்க்குப்
         பன்னும் பருத்திதான் பாங்கல்ல – இன்னதனால்
         வள்ளலெனும் புன்னை வனநாதா மையிரவில்
         துள்ளிலவம் பஞ்சில் துயில்
 
உரை
     வள்ளலாகிய புன்னைவன நாதனே! அன்னத்தின் மென்சிறகு போன்ற மலையிலவம்தான் அரசர்களுக்கு ஆகும். பருத்தி அவர்களுக்கு உகந்ததல்ல. இதனால் மைபோன்ற கரிய இரவில் செறிக்கப்பட்ட இலவம்பஞ்சினாலய மெத்தையில் உறக்கம் கொள்வாயாக.
 
விளக்கம்
     தூவி – சிறகு. அன்னப் பறவையின் சிறகு மென்மையானதனால் அதுபோன்ற மென்மையுடைய இலவம்பஞ்சுடன் நேர்வைத்தார். கோங்கு – மலை இலவம். அரசர்களுக்கு பருத்தி மெத்தை நல்லதல்ல என்பதை அரசர்க்குப் பன்னும் பருத்திதான் பாங்கல்ல என்றார். பாங்கு – நன்மை. மை- கரிய. கரிய இரவுதான் உறக்கத்திற்குரிய காலம் என்பதால் மையிரவில் துயில் என்றார். 

     இலவம்பஞ்சினாய மெத்தையில் துயில் என்பதற்குப் பதிலாக இலவின் பஞ்சுபோல கிடந்துறங்குக என்று பொருள்கொள்வாரும் உண்டு. சிறிய காற்றிற்கும் இலவம்பஞ்சு நிலை கிடவாமல் எழுதல் போல சிறிய இயக்கத்திற்கும் உணர்ந்து எழுதல் வேண்டும் என்னும் பொருண்மையில் இங்ஙனம் கூறுவர். முதற்கூறப்பட்ட பொருளை இன்னார் மறுப்பதற்குக் காரணம் இலவம்பஞ்சில் துயிலுதல் எல்லோருக்கும் இயலுவதல்ல. வறியவர்களுக்கு அஃதரிது. அதுமட்டுமல்லாது “உறங்கப் புறந்திண்ணையுண்டு” என்பது இங்கு பரவலாக உள்ள கொள்கை. ஆதலால் உறக்கத்திற்கே இங்கு முன்னுரிமை, உறங்கப்பயன்படுத்தும் பொருளுக்கல்ல என்பது கருத்து. நெடுந்துயிலும் இங்கு செயலுக்கு எதிரானது என்று பார்க்கப்படுகிறது. “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கொடுநீரார் காமக் கலன்” (குறள், 605) என்பார் வள்ளுவர். வியாச பாரதத்தில் வரும் “நாய்போல் துயில்க” என்பதையும் எடுத்துக்காட்டுவர். எனவே கும்பகர்ண உறக்கமாக அல்லாது இயக்கத்திற்குத்தக உறக்கம்கொள்க என்பதே சிலரது கருத்து. 

     இராமபாரதி அரசர்க்குதான் இலவம்பஞ்சுத் துயில் நல்லது என்கிறார். எனவே இது வறியவர்க்கு இயலுமா என்று பொருத்த வேண்டியதில்லை. இலவம்பஞ்சு மெத்தை உறக்கத்திற்கு நல்லது. உடலுக்கு வலியை ஏற்படுத்தாது, சோர்வு தராது என்பதால் இலவம்பஞ்சினாலய மெத்தைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

கருத்து
     இளவம்பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையில் உறக்கம் கொள்க என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment