பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம்

இதழ் - 116                                                                                                              இதழ் - ௧௧
நாள் : 14- 07 - 2024                                                                                           நாள் :  - 0 - ௨௦௨௪


ஔவை (கி.பி -2)

ஔவையும் அதியனும்

     பெருஞ்சேரல் இரும்பொறையுடன் பொருதிய  அதியமான் நெடுமான் அஞ்சி  "வீரச்சா" அடைந்தான். போர்க்களத்தில் ஔவையும் இருந்தாள். மார்பிலே குத்தப்பட்ட ஈட்டியுடன் மடிந்து களத்தில் கிடந்த அதியனைப்  பார்த்து விம்மி விம்மி  அழுதாள்.  அதியமானின் பல்வேறு நற்பண்புகளைச் சொல்லி ஔவை  கலங்குகிறாள்.


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!  
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,  
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?  
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!      (புறநானூறு  235)

சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான்.  பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு, பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.

(கள் என்பது அக்காலத்தில் சாதாரணமாக எல்லோராலும் குடிக்கப்படும் பானம். இக்காலத்தினைக் கொண்டு  அக்காலத்தினைக்  கணித்தல் கூடாது.)

எல்லார்க்கும் பொதுவான நிலையில் தனக்குக் கிடைக்கும் சிறு அளவான சோற்றினை பலரோடும் கலந்து உண்பான். பெரிய அளவினதாகிய சோறு கிடைப்பின் மிகப் பலரோடும் கலந்து உண்பான். சோற்றின் இடையே எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அவற்றை எங்களுக்கு அளிப்பான். 

(இனி இவ்வாறு செய்வதற்கு யார் உளர் ? என எண்ணி மருகுகிறாள்.)

அம்போடு வேல் வந்து பாயும் போர்க்களங்களில் தான் சென்று முன்னிற்பான். தன் காதல் கிழத்திகளுக்குத்  தன் கையால் மாலை சூட்டுதலால் நரந்தப் பூ மணம் வீசும் தன்னுடைய கையால் புலால் நாறும் என் தலையைத் தடவுவான். 

(அவன் அன்பு மீண்டும் கிடைக்குமா என எண்ணிப் பாடுகிறாள்)

அவனுடைய கரிய மார்பில் தைத்த வேல்  அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டை என்கின்ற  பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்து,  நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது. 

(அதாவது அதியன் மட்டும் இறக்கவில்லை.  அவன் இல்லாமையினால் இரப்போரும் இறந்தோர் ஆயினர் என்பதனைப் பாடுகிறார் . தமிழை வாழவைத்த அதியன் இழப்பு; தமிழைப் பாடுவோருக்கான இழப்பு என்பதனை எண்ணி மருகுகிகிறாள்.)

எங்களுக்குப் பற்றுக் கோடான எங்கள் தலைவன் எங்கே உள்ளானோ? இனிப் பாடுகின்றவரும் இல்லை; பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீரை உடைய துறையில் தேனைக் கொண்ட பகன்றை மலர்கள் பிறராற் சூடப்படாமல் உதிர்வது போலப் பிறர்க்குப் பொருளைக். கொடுக்காமல் மாய்ந்து போகின்றவர்கள்தாம் இவ்வுலகில் பலராக உள்ளனர்”. என்கிறாள்.

அதியனது வள்ளல் தன்மை பேசப்படும் இடம் இது.

மன்னனாக இருந்தாலும் வீட்டில் உள்ள ஒருத்தனைப் போல் எல்லோராலும் நேசிக்கப்பட்டவனாக அதியன் இருந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது. 

(வரும் கிழமையும் ஔவை வருவாள்…)
  
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

No comments:

Post a Comment