பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

தழ் - 44                                                                                               இதழ் - ௪நா
நாள் : 26-02-2023                                                                           நாள் : -0௨-௨௦௨௩
 
 
 
நாடு

நாடு
    நாடு என்றும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அவ்வாறு தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. தமிழ்நாடு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுத் தனித்தனியே நாடு என்றும் பெயருக்கு பெற்றது. சேர நாடு, சோழ நாடு. பாண்டிய நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு என்று அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

    சிறுபான்மையாகச் சில தனியூர்களும் நாடென்று பெயர் பெற்றன. முன்னாளில் முரப்பு நாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்ல நாடு என்னும் பெயருடையது. இங்ஙகனம் நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம். 

  மாயவரத்திற்கு அருகாமையிலுள்ள ஓரூர் கொரநாடு என்று அழைக்கப்படுகிறது. கூறை நாடு என்பதே கொரநாடென மருவி வந்துள்ளது. பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன. உதகமண்டல வட்டாரத்தில் நஞ்சநாடு, முட்டிநாடு, கடநாடு, தாந்தநாடு, எப்பநாடு முதலிய ஊர்கள் நாடு என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment