பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ்–3                                                                                          இதழ் - ௩
நாள் : 15-5-2022                                                                            நாள் :
௧௫-ரு-௨உஉ 

 

பழமொழி - 3

'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு'


    தருமத்தை இளமையிலேயே செய்க; பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றால், அது முடியாமல் போகலாம் என்பது இப்பழமொழியின் பொருள். (துயக்குமனமயக்கம், சோர்வு, துயரம்)

 

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்

ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி

'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து

துஞ்ச வருமே துயக்கு'

     ஒருவன் இச்சமூகத்திற்குச் தருமம் (சேவை) செய்ய நினைத்தால் அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செய்துவிட வேண்டும். ஏனெனில் மனிதப்பிறப்பு ஓர் மகத்தான பிறப்பாகும். முடிந்த வகையில் அனைத்துத் தரும காரியங்களையும் இளமையிலேயே செய்து விடவேண்டும்.
 
     ஒரு மனிதனுக்கு நோய், முதுமை, அறிவுமயக்கம் முதலானவை ஏதாவது ஒரு காலத்தில் வந்து சேர நேரலாம். அந்த நேரத்தில் நாம் அதைச் செய்ய முடியாமல் போகலாம். எனவே காலம் அறிந்து தள்ளிப்போடாமல் தரும (சேவை) காரியங்களைச் செய்ய வேண்டுமென இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

 

கிராமத்துப் பழமொழி (சொலவடை)

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா ?

 
     மண் குதிரையில் ஆற்றை கடக்க நேர்ந்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து, நாம் தண்ணீரில் சிக்கித்தவிக்க நேரிடும் என்பது இப்பழமொழியின் வாயிலாக வெளிப்படையாக நாம் புரிந்து கொள்ளும் பொருளாகும்.
 
     ஆனால், மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு அல்லது மணல்மேடு ஆகும். இந்த மண் குதிரினை (குதிர் – மணல் மேடு) நம்பி ஆற்றைக் கடக்க முற்பட்டால் அந்த மணல் மேடு கரைந்து நாம் ஆற்றில் சிக்கித் தவிக்க நேரிடலாம் என்பதே உண்மையான பொருளாகும்.
 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் (சொலவடை) பொருள் திறத்தை தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்.

 

( தொடர்ந்து அறிவோம் . . . )

 

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

1 comment: