பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 2

 

இதழ் - 4                                                                  இதழ் - ௪ 
நாள் : 22-5-2022                                                   நாள் : உஉ-ரு-௨உஉ



ஆத்திசூடி (ஔவை)

         ஆறுவது சினம்

உரை : 

         சினம் (கோபம்) தணிய வேண்டிய ஒன்றாகும்

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் - 2 :
             ஆதி நிமிசிவிகைக் காளாய்ச் சடபரதர்
             தீது பொறுத்துச் சிறப்புற்றார் - சோதிப்
             புயமா வளர்கின்ற புன்னை வனநாதா
             செயமா றுவது சினம்
உரை : 

     ஒளிபொருந்திய தோள்களையுடைய புன்னைவனநாதனே! முற்காலத்தில் சடபரதர் என்னும் முனிவர், தன்னை நிமி என்னும் அரசன் அதிகாரத்தினால் அவனது பல்லக்கைச் சுமக்கச் செய்ததைப் பொறுத்துக் கொண்டு சினம் கொள்ளாமல் செயல்பட்டதால் தன்னிலையில் சிறப்புப் பெற்றார். எனவே சினம் தணிதலே வெற்றிக்கான வழியாகும்.


சடபரதர் கதை:

     பரதர் என்னும் அரசர் உலகப் பற்றுகளைத் துறந்து காட்டில் தவஞ்செய்து வந்தார். ஒருநாள் அவர் நீராடுவதற்காகக் கண்டகி ஆற்றுக்குச் சென்றார். அப்பொழுது நிறைமாத சூல்கொண்ட நிலையில் மானொன்று நீரருந்த அவ்வாற்றுக்கு வந்தது. சிங்கமொன்றும் அங்கே வருவதற்கான அறிகுறியாக சிங்கத்தின் முழக்கங்கேட்டது. அஞ்சிநடுங்கிய மான் அவ்வாற்றிலேயே கன்றை ஈன்றுவிட்டு விரைந்தோடியது. மான்கன்று ஆற்றுநீரில் மிதந்து தத்தளித்தது.

     அச்சமயம் அங்குவந்த பரதர் அக்கன்றின் மேல் இரக்கங்கொண்டு “தன்னைவிட்டால் இம்மான்கன்றைப் பேணி வளர்ப்பவர் யாருமில்லை” என்று உள்ளத்தில் எண்ணியவராய் அதனை எடுத்துவந்து வளர்த்தார். அம்மான்கன்றின்மீது அவருக்கு அளவுகடந்த பற்றுண்டாயிற்று. அவரது மரண காலத்திலும் அவரது சிந்தனை அந்த மான்மீதே இருக்கும் அளவிற்குப் பற்று மிகுந்திருந்தது. அதனால் அடுத்த பிறப்பில் மானாகப் பிறந்தார். ஆயினும் முன்செய் தவத்தின் விளைவால் தன் பிறப்பிற்கான காரணத்தை அறிந்திருந்தார் மானாகப் பிறந்திருந்த பரதமுனிவர். எனவே வினை நீக்கத்திற்காகத் தான் பிறந்த காலாஞ்சனம் என்னும் இடத்தை விடுத்து சாளக்கிராமம் என்னும் இடத்தை அடைந்தார். பின்னர் மான் பிறப்பும் நிறைவுற்று அடுத்த பிறப்பில் அங்கிரா முனிவர் மரபிற் பிறந்து, எந்தவொரு தவமுயற்சியுமின்றியே தவநிலை வாய்க்கப்பெற்று, பற்றுகொன்று சடம்போலிருந்தார். அதனால் சடபரதர் என்று அழைக்கப்பெற்றார்.

     சடபரதரின் சுற்றத்தார் அவரை வயலுக்குக் காவலராக நியமித்தனர். அப்பொழுது சூத்திரன் ஒருவன் தனக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவேண்டி காளிதேவிக்குப் பலிகொடுப்பதற்காக ஒருவனைப் பிடித்து வைத்திருந்தான். விதிவசத்தினால் அவன் அச்சூத்திரனிடமிருந்து தப்பியோடி விட்டான். அவனைத் தேடிச் செல்லும்பொழுது வழியில் பரதமுனிவரைக் கண்டான். பரதமுனிவரைப் பிடித்துக் கொண்டுபோய் காளிக்குப் பலியிடுவதற்காக பலியிடத்தில் நிறுத்தினான். 

     அவருடைய தவ ஆற்றலினால் தகிக்கப்பட்ட காளிதேவி கோரவடிவங்கொண்டு அவரைப் பலியிடுவதற்காகப் பிடித்துக் கொண்டு வந்தோரைக் கொன்று அவர்களுடைய குருதியைக் குடித்தாள். அக்காலத்தில் நிமி என்னும் அரசன் (இரகுகணன் என்று கூறுவாரும் உளர்) ஞானோபதேசம் பெற வேண்டி கபிலமுனிவருடைய ஆசிரமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். 

     பரதமுனிவருடைய சிறப்பினை அறியாது அதிகாரத்தினால் வழியில் அவரைத் தன் பல்லக்கைச் சுமக்கச் செய்தான். அப்பொழுதும் தன்னிலையிலிருந்து வழுவாமல் சினங்கொள்ளாமல் யாதோர் உயிருக்கும் துன்பம் வாராது, அவ்வரசனின் பல்லக்கைச் சுமந்து சென்றார். பின்பு பரதமுனிவருடைய பெருமையை உணர்ந்த அவ்வரசன் முதலியோர் அவரைச் சீவன்முத்தர் என்று போற்றிக் கொண்டாடினர்.

(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

விளக்கம் :

     சிவிகை - பல்லக்கு; செயம் - வெற்றி; சினத்தை விடுத்தலே வெற்றிக்கான வழி என்பதால் 'செயம் ஆறுவது சினம்' என்றார். சினத்தை வெல்லுதல் என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. அதனைத் தணியச் செய்வதே பெரும் வெற்றி என்றும் பொருள் கொள்ளலாம். “மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்” (குறள், 303) என்ற வள்ளுவர் சொற்கள் இவண் நினையத்தக்கன. ஆறுவது சினம் என்பதை நன்குணர 'வெகுளாமை' என்னும் திருக்குறள் அதிகாரம் காண்க.

கருத்து :

 
     சினம் என்னும் தீயைத் தணியச் செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி என்பது இப்பாடலின் மையக்கருத்தாகும்.

 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

1 comment:

  1. செயம் ஆறுவது சினம்
    அருமை 👍

    ReplyDelete