பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ்–3                                                                                          இதழ் - ௩
நாள் : 15-5-2022                                                                            நாள் :
௧௫-ரு-௨உஉ

 
      தமிழில் உள்ள எழுத்துகள் இருநூற்று நாற்பத்தி ஏழு (247) என்பதனைச் சென்ற இதழில் கண்டோம். இலக்கண ஆசிரியர்கள் எழுத்துகள் அனைத்தையும் இரண்டு வகைப்படுத்தியுள்ளனர்.
 
அவை, 1. முதலெழுத்து, 2. சார்பெழுத்து என்பனவாகும்.

              " மொழிமுதற் காரணமாம் அணுத் திரள் ஒலி
              எழுத்து அது முதல் சார்பு எனஇரு வகைத்தே "
 
என்று நன்னூல் எழுத்தின் வகைக்கு இலக்கணம் குறிப்பிடுகின்றது.
 

 
முதலெழுத்து
 
     உயிர் எழுத்து பன்னிரண்டும் (12), மெய்யெழுத்து பதினெட்டும் (18) சேர்ந்த முப்பது (30 ) எழுத்துகள் முதலெழுத்தாகும்.
 
' உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே'  -  என்கிறது நன்னூல்.
 
 
ஏன் இந்த முப்பது (30) எழுத்துகளையும் முதலெழுத்து என்கிறோம் தெரியுமா?
 
     முதலெழுத்து பிற எழுத்துகள் தோன்றுவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதனால் (முதலாக இருப்பதால்) இதனை முதலெழுத்து என்கிறோம்.

 
உயிரெழுத்து
 
     உயிரெழுத்து பிற ஒலிகளின் துணை இல்லாமல் உயிர் போல தானே இயங்கக் கூடியது. அதுமட்டுமில்லாமல் பிற மெய்யெழுத்துகளோடு சேர்ந்து அவற்றை இயக்கும் ஆற்றல் உயிரெழுத்திற்கு உண்டு. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டினைக் குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர்.

 
குறில்
 
     உயிரெழுத்துகளில் குறுகிய ஓசை உடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்தும் உயிர்க்குறில் என்று அழைக்கப்படுகிறது.

 
நெடில்
 
     உயிரெழுத்துகளில் நீண்ட ஓசை உடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழும் உயிர் நெடில் என்று அழைக்கப்படுகிறது.
 
உயிர்க்குறில், உயிர் நெடில் இவ்வேறுபாட்டை நன்கு அறிய வேண்டும்.
 
சான்றாக, அணி  - ஆணி
  • அணி என்றால் அழகு என்று பொருள்படும்.
  • ஆணி என்றால் இரும்பாணி, எழுத்தாணி என்று பொருள்படும்.
குறில் நெடில் வேறுபாடு அறிந்து எழுதாவிட்டால் பொருளே மாறுபடும்.

 
மெய்யெழுத்து
 
     மெய் என்றால் உடல் என்று பொருள். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல மெய் தன் முயற்சியால் இயங்க முடியாதது. பிற உயிர்களின் துணைகொண்டு இயங்கக்கூடியது. ஆகையால்தான் இதற்கு மெய்யெழுத்து என்று பெயர்.

மெய்யெழுத்துகள் பதினெட்டை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.
அவை,
  • வல்லினம்
  • மெல்லினம்
  • இடையினம்

வல்லினம்
 
     க், ச், ட், த், ப், ற் என்பன வலிய ஒலியுடையதால் இவற்றை வல்லினமெய் என்கிறோம்.

 
மெல்லினம்
 
     ங், ஞ், ண், ந், ம், ன் என்பன மென்மையான ஒலியுடையதால் இவற்றை மெல்லினமெய் என்கிறோம்.

 
இடையினம்
 
     ய், ர், ல், வ், ழ், ள் என்பன வல்லினம், மெல்லினம் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலி உடையதால் இவற்றை இடையினமெய் என்கிறோம். 
 
 
இவையே முதலெழுத்துகளாகும்.
 
 
( தொடர்ந்து கற்போம் . . . )
 

தி.செ. மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.

1 comment: