பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 3

 
இதழ் - 5                                                                       இதழ் - ரு  
நாள் : 29-5-2022                                                         நாள் : உ௯-ரு-௨௦உஉ
 

ஆத்திசூடி (ஔவை)
           
             இயல்வது கரவேல்

உரை :
     உன்னால் கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு மறைக்காமல் கொடுத்துதவுக.

 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 3 :
     இந்துமதி விற்றுமலைந் தீனனுக்கா ளாயுமரிச்
     சந்திரனோ தன்னிலை தப்பவில்லை - நந்தம்
     மநுநெறி தேர்புன்னை வனநாதா பூமி
     யினியல் வதுகர வேல்


உரை :
     பெருமுயற்சியினால் மநுநெறியைத் தெளிந்தறிந்த புன்னைவனநாதனே! தனது மனைவி இந்துமதியை விற்கும் நிலையிலும், இழிந்தோனுக்குத் தான் அடிமையனாய் நிற்கும் நிலையிலும்கூட அரிச்சந்திரன் ‘பொய் சொல்லலாகாது’ என்ற தன் கொள்கையிலிருந்து மாறுபடவில்லை. எனவே உலகத்தில் உன்னால் கொடுக்க முடிந்த அனைத்தையும் ஒளியாமல் கொடுப்பாயாக.

அரிச்சந்திரன் கதை :
     சூரியகுலத்துதித்த திரிசங்கு மன்னனின் மகனாகிய அரிச்சந்திரன் தன் மனைவியாகிய இந்துமதியை விற்றும், புலையனுக்குத் தான் அடிமையாகப் பெற்றும் தன்னுடைய அறத்தில் உறுதியாக நின்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

விளக்கம் :
     இந்துமதி - அரிச்சந்திரனின் மனைவி; மன்னனான அரிச்சந்திரன் இடுகாட்டுக் காவலனின் அடிமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்தான் என்பதை “ஈனனுக்கு ஆளாயும்” என்றார். தன்னிலை - பொய்யுரைக்க மாட்டேன் என்னும் அரிச்சந்திரனின் கொள்கை; நந்தம் - பெருமுயற்சி; அறத்தில் நிலைநிற்க உன்னால் கொடுக்க இயன்ற அனைத்தையும் கொடு என்பதைச் சொல்ல அரிச்சந்திரன் தன் மனைவியை விற்றதையும், தன்னையே அடிமையாகக் கொடுத்ததையும் ஆசிரியர் இவண் குறித்தார்.

கருத்து :
     உன்னால் கொடுக்க முடிந்த எதனையும் தேவைப்படுவோர்க்கு ஒளியாமல் கொடுத்து உதவுக என்பது இப்பாடலின் மையக்கருத்து.

 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

 

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

1 comment:

  1. அரிச்சந்திரனின் மனைவியின் பெயர் சந்திரமதியா இந்துமதியா ஐயம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete