பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 4

 

இதழ் - 6                                                                            இதழ் -   
நாள் : 5-6-2022                                                                நாள் : --உஉ
 

ஆத்திசூடி-4 (ஔவை)

ஈவது விலக்கேல்

 

உரை :
     ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே. 

 

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் - 4 :
     மாவலியை மாலுக்கு மண்ணுதவாமல் தடுத்த
     காவலினாற் சுக்கிரனுங் கண்ணிழந்தான் - நாவதனாற்
     நன்னீதிப் புன்னைவன நாதமகி பாவுலகத்
     தின்னீ வதுவிலக் கேல்
 
உரை :
     நாவன்மையால் நல்ல நீதியை வழங்கும் புன்னைவனநாதனெனும் அரசனே! மாவலிச் சக்கரவர்த்தி வாமனனாக வந்த திருமாலுக்கு மூன்றடி மண்ணினைத் தானமாக வழங்குவதைத் தடுக்க முற்பட்டதால் சுக்கிராச்சாரியன் தன் கண்பார்வையை இழந்தான். எனவே நீ உலகத்தாரின் ஈயும் செயலைத் தடுக்காதே.

 

மாவலி கதை :
விரோசனன் என்பவனின் மகன் மாவலி. அவன் பிரம்மாவிடம் மூவுலகையும் ஆளும் வரத்தைப் பெற்று தேவலோகம் உட்பட மூவுலகையும் ஆண்டு வந்தான். தங்கள் உலகத்தை இழந்த தேவர்கள் திருமாலிடம் (விட்டுணுமூர்த்தி என்பது இலங்கைப் பதிப்பின் பாடம்) சென்று தங்கள் குறைகளைக் களைந்தருள வேண்டும் என்று வேண்டி நின்றனர். திருமாலும் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். காசிபன் அதிதி இணையருக்கு மகனாகப் பிறந்து, வாமன வடிவத்தில் மாவலி மன்னனை அணுகி மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். மாவலியும் மூவடி மண்ணுக்கு உடன்பட்டு நீர்விட்டுத் தானமளிக்கும்பொழுது அவன் குருவாகிய சுக்கிராச்சாரியார் வண்டு வடிவங்கொண்டு நீர்க்குடுவையின் மூக்குத்துளையினுட்சென்று நீர்வழிப் பாதையைத் தடுத்து நின்றார். வாமனர் தர்ப்பைப் புல்லைத் துளையினுள் நுழைக்க புல்நுனி வண்டுவடிவங் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்திற்று. அவர் கண்பார்வையை இழந்தார். 

(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

 

விளக்கம் :
     மால் - திருமால்; விஷ்ணு என்பது புராணம். மூன்றடி நிலம் தானமளிக்கவிடாமல் தடுத்த சுக்கிராச்சாரியார் என்பதை “மண்ணுதவாமல் தடுத்த காவலினால் சுக்கிரன்” என்றார். மாவலியைக் காத்தற்பொருட்டே சுக்கிராச்சாரியார் தடுத்தார் என்பதால் “காவலினால் சுக்கிரன்” என்றார். நீதி வழங்குவதில் வல்லவன் புன்னைவனநாதன் என்பதை “நாவதனால் நன்னீதிப் புன்னைவன நாத” என்றார். அவன் அரச மரபினன் என்பதை 'மகிபா' என்னும் விளி உணர்த்துகிறது. மகிபன் - மன்னன் ; 'உலகத்தின் ஈதல்' என்பது உலகத்தில் வாழும் மக்கள் செய்யும் ஈதலைக் குறித்தது.

 

கருத்து :
     யாரொருவர் செய்யும் அறச் செயல்களையும் தடுக்காதே. தடுப்பின் துன்பம் விளையும் என்பது பாடலின் மையக்கருத்து.


( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

 

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

2 comments:

  1. அறியாத செய்திகள்....அறியச் செய்யும் கருத்துக்கள்

    ReplyDelete