பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 5

இதழ் - 7                                                                         இதழ் -   
நாள் : 12-6-2022                                                           நாள் : ௧௨--உஉ

 


ஆத்திசூடி (ஔவை)

 

உடையது விளம்பேல்


உரை : 

     உன்னிடம் உள்ள பொருள் குறித்துப் பிறர் அறியும்படி சொல்லாதே.

 

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 

பாடல் - 5 :

     உள்ளபடி தன்சிறகி லுண்டுபல மென்றொருசொல்
     விள்ளுஞ் சடாயுமுனம் வீழ்ந்ததுபார் - வள்ளற்
     றனபதியே புன்னைவனத் தாளாளா வொன்னார்க்
     குனதுடைய துவ்விளம் பேல்

உரை : 

    வள்ளண்மையில் ஊக்கமுடைய செல்வனாகிய புன்னைவனநாதனே!  தனது சிறகில்தான் தன்னுடைய வலிமை பொருந்தியுள்ளது என்பதைச் சொற்களால் வெளிப்படுத்தியதால் முன்னொரு நாள் சடாயு வீழ்ந்தான் காண். எனவே உனது பகைவர்கள் அறியும் வகையில் நீயும் உன்னிடம் உள்ள பொருள்களைப் பற்றிப் பேசாதே.


சடாயு கதை :

     காசிப முனிவருக்கும் வினதை என்பாளுக்கும் கருடன், அருணன் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் அருணனுக்குச் சம்பாதி, சடாயு என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். சடாயு அயோத்தி மன்னனாகிய தசரதனுக்கு நண்பனாவான். அதனால் சீதாப்பிராட்டியைக் காட்டில் இராவணன் கடத்திச் செல்லும்பொழுது அவனைத் தடுத்துப் போரிட்டான். அப்பொழுது தனது வலிமை தனது சிறகுகளில் உள்ளது என்பதை வெளிப்படுத்திவிட்டான். சடாயுவை எதிர்க்க முடியாமல் வருத்தமடைந்தாலும் இறுதியில் சடாயுவின் சிறகுகளை வெட்டிவீழ்த்தி இராவணன் வென்றான்; சீதாப்பிராட்டியைக் கடத்திச் சென்றான். சடாயு இறந்துபட்டான்.

(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு).


விளக்கம் : 

     விள்ளுதல் - சொல்லுதல். செல்வந்தராக இருப்பதோடு வள்ளலாகவும் புன்னைவனநாதன் இருந்ததால் “வள்ளல் தனபதியே” என்றார். செல்வமுள்ள இடத்தில்தான் வள்ளண்மையும் வளரும் என்பதை “வளப்பாத்தியுள் வளரும் வண்மை” (பாடல், 16) என்று நான்மணிக்கடிகையும் உரைத்தல் காண்க. தாளாண்மை - ஊக்கமுடைமை; வள்ளண்மையில் ஊக்கமுடையவர் என்பதால் புன்னைவனநாதனைத் 'தாளாளா' என்றார். ஒன்னார் - பகைவர்; பகைவர் அறிய உனது பலத்தையும் பலவீனத்தையும் சொல்லலாகாது என்பதை “ஒன்னார்க்கு உன் உடையது விளம்பேல்” என்றார்.


கருத்து : 

     யாரொருவரித்தும் உன்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி நீயே புகழ்ந்து பேசாதே. பேசிடின் அதுவே உனக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.





( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

 

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 
 

1 comment: