பக்கங்கள்

அரங்கேற்று காதை - 5

இதழ் - 117                                                                                          இதழ் - ௧௧
நாள் : 21- 07 - 2024                                                                        நாள் :  - 0 - ௨௦௨௪



அரங்கேற்று காதை - 5

     தமிழில் பிள்ளைத்தமிழ் என்று ஓர் இலக்கிய வகையுண்டு. அது கடவுளையோ அரசனையோ வள்ளலையோ மதிப்பிற்குரிய யாரையோ குழந்தையாக பாவித்துப் பாடுவது. குழந்தையின் மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையிலான காலத்தை பத்துப் பருவங்களாகப் பரித்துக்கொண்டு பருவத்துக்குப் பத்துப் பாடல்களாகப் பாடப்படும். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு பாடிய பாடல்களை இவ்வமைப்பிற்கு முன்னோடியாகக் கூறலாம். இது தொடக்கத்தில் ஆண்களைப் பாடுவதாக இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் தமிழில் பாடப்பட்ட முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். அதன் பிறகு ஐநூறு ஆண்டுகள் கழித்து வந்த ஒருவர் முதன்முதலாக ஒரு பெண்தெய்வத்தின்மீது பிள்ளைத்தமிழ் பாடினார். அந்த நூல் அரங்கேற்றப்படும்பொழுது அத்தெய்வமே நேரில் வந்து அவையில் அமர்ந்து பாடல்களைக் கேட்டு உகந்ததாம். அது ஓர் அருள்நிகழ்வு…

     ஸ்ரீவைகுண்டத்தில் தன்னை ஈன்றெடுத்த சண்முக சிகாமணிக்கவிராயர், சிவகாமசுந்தரி அம்மையின் திருவடிகளில் விழுந்து வணங்கிய குமரகுருபரர், தான் தலப்பயணம் செய்வதற்கான அவர்களின் அனுமதிக்காகக் காத்து நின்றார். அருகில் தம்பி குமாரகவியும் நின்றிருந்தார். கவிராயரின் கண்கள் பற்பல பேசினாலும் வாய் பேசாமல் நின்றிருந்தார். சிவகாமசுந்தரி அம்மைதான் “சிறுபிள்ளை இப்படிப் பயணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறானே, வழியில் ஏதேனும் அல்லல் எற்பட்டால் என்ன செய்வான், உணவுக்கு என்ன செய்வான், யார் பார்த்துக் கொள்வார்கள், ஐந்துவயது வரை ஊமையாய் இருந்து செந்தூர் முருகன் அருளால் பேசினான் என்று மகிழ்ந்திருந்தேனே” என்றெல்லாம் மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினாள். 
“கவலைப்படாதீர்கள் அம்மா! எல்லாம்வல்ல இறையருள் எம்மைக்காக்கும். உலகுபுரக்கும் அன்னையாம் மீனாட்சி ஆளும் மதுரைக்கே நான் முதலில் செல்ல எண்ணியிருக்கிறேன். உலக அன்னை எனக்கும் அன்னையல்லவா? அவள் என்னைக் காவாது போய்விடுவாளா? அருகிலேயே பரங்குன்றத்து முருகக்கடவுளும் இருக்கிறார். எனக்கு ஒரு குறையும் இல்லை அம்மா!”

     தாயுள்ளம் அவரது எந்த விளக்கத்திற்கும் இடந்தரவில்லை. ஆனால் இறைநாட்டம் மேலிட்டிருந்த குமரகுருபரரின் பிடிவாதமே வென்றது. தம்பி குமாரகவியும் உடன் செல்வது என்ற முடிவுடன் அவரது தலப்பயணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

     இளைஞர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மதுரை நோக்கிக் கிளம்பினார். மதுரையை அடைந்ததும் அன்னை மீனாட்சியைக் கண்டு வழிபட்டார். செந்தூர் முருகன் தந்த தமிழால் போற்றித் தொழுதார். முதல் பெண்பால் பிள்ளைத்தமிழ் தோன்றியது. அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்திற்குச் சென்றார். தெய்வானையை மணந்த கோலத்தில் எழுந்தருளியிருந்த கந்தவேளைக் கண்டு நெக்குருகினார். அங்கேயே தங்கியிருந்து முருகக்கடவுளின் அருளில் திளைத்திருந்தார்.

     அக்காலத்தில் மதுரையில் நாயக்கர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்து. திருமலை நாயக்கர் என்பவர் அங்கு ஆட்சி செய்துவந்தார். திருச்செந்தூர் முருகக்கடவுள் மீது தாளாத பத்திமை கொண்டவர் அவர். குமரகுருபரர் பரங்குன்றத்தில் தங்கியிருந்தபொழுது ஓரிரவு திருமலைநாயக்கரின் கனவில் மீனாட்சியம்மை எழுந்தருளினார். “திருமலை மன்னா! எனது மகனின் அருள்பெற்ற குமரகுருபரன் என்மீது பிள்ளைத்தமிழ் நூலொன்று பாடியுள்ளான். அவன் இப்பொழுது பரங்குன்றத்தில் தங்கியிருக்கிறான். அவனைத் தக்க சிறப்புகளுடன் அழைத்துவந்து நமது சந்நிதியில் அவன் பாடியுள்ள நூலை அரங்கேற்றச் செய்க” என்று சொல்லி மறைந்தார்.

     விழித்தெழுந்த மன்னர் காலையில் அரசவையைக் கூட்டி மீனாட்சியம்மை கனவில் இட்ட கட்டளையைச் சொல்லி குமரகுருபரரின் வருகையைக் குறித்து விசாரித்தார். அமைச்சர்களும் குமரகுருபரர் பரங்குன்றத்தில் தங்கியிருக்கும் செய்தியை அறிந்து கூறினர். மன்னர் தனது பரிவாரங்களுடன் பரங்குன்றம் சென்று குமரகுருபரரை வணங்கி அம்மையின் ஆணையைக் கூறினார். மிக மகிழ்ந்த குமரகுருபரர் மன்னருடன் யானை மீதிவர்ந்து மதுரை வந்தார்.

     மீனாட்சியம்மையின் சந்நிதி மண்டபத்தில் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்திற்கான ஏற்பாடுகளை திருமலை மன்னர் செய்திருந்தார். அரங்கேற்றத்திற்கென குறித்த நாளில் குமரகுருபரர் திருக்கோயிலை வலம்வந்து சொக்கநாதரையும் மீனாட்சியம்மையையும் வணங்கினார். அம்மையின் சந்நிதியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கேற்ற அவைக்குச் சென்றார். அவரது வருகையை எதிர்நோக்கி மன்னர் மட்டுமல்லாது தமிழறிஞர்களும் சைவச் சான்றோர்களும் மக்களும் கூடியிருந்தனர். தம்பி குமாரகவி பின்தொடர குமரகுருபரர் அவைக்குள் நுழைந்தார். திருவைந்தெழுத்து முழங்க அவை அவரை வரவேற்றது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடல்கள் அடங்கிய ஏடுகள் பொன்தட்டில் பட்டுத்துகிலால் போர்த்தப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தன. சொக்கநாதருக்கும் மீனாட்சியம்மைக்கும் வழிபாடுகள் நிறைவடைந்தவுடன் அவ்வேடுகளும் மலர்தூவி வணங்கப்பட்டன.

     திருமலை மன்னர் குமரகுருபரரை வணங்கி அவருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பிருக்கையில் அவரை அமரச்செய்து, அதனருகில் தரையில் விரிக்கப்பட்டிருந்த பட்டாசனத்தில் சென்று அமர்ந்தார். மன்னரின் இச்செயல் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. குமரகுருபரரின் பெருமையை சொல்லாமல் சொல்லியது. 

     “குமரகுருபரரே! எனது நல்லூழால் தாங்கள் திருவாய் மலர்ந்தருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்றச் செய்யும் பேறுபெற்றேன். அம்மையைத் தாங்கள் தமிழால் அணிசெய்துள்ள திறத்தைத் தங்கள் திருவாக்காலேயே கேட்க இங்கு கூடியுள்ள மக்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். புலவர் பெருமான் அருள்செய்ய வேண்டும்” என்று மன்னர் குமரகுருபரரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். 
 
     “திருமலை மன்னரே! தங்கள் திருமுன் இந்நூலை அரங்கேற்றுவதில் எமக்கும் மகிழ்ச்சியே. அம்மையின் சந்நிதியில் இந்நூல் சிறப்பெய்துவது அவளது அருள். எனது தம்பி குமாரகவி பாடல்களை வாசிப்பார். நான் அவற்றிற்கு பொருள் சொல்கிறேன். சரிதானே?” என்றார் குமரகுருபரர்.
“தங்கள் ஆணை குமரகுருபரரே!”

அரங்கேற்றம் தொடங்கியது. 

“கார்கொண்ட கவுள்மதக் கடைவெள்ள முங்கட்
     கடைக்கடைக் கனலும்எல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
     கடைக்கால் திரட்டஎங்கோன்
போர்கொண்ட எண்தோள் பொலன்குவடு பொதியும்வெண்
     பொடிதுடி அடித்துவைத்துப்
புழுதியாட்டு அயராஒர் அயிர்ஆவணத்து உலவு
     போர்க்களிற்றைத் துதிப்பாம்”

என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நல்ல முறையில் அரங்கேற விநாயகக் கடவுளைத் துதித்தார் குமரகுருபரர்.

     அவை அமைதியாக குமரகுருபரரின் சொற்களையே கவனித்துக் கொண்டிருந்தது. மீனாட்சியம்மைக்கு பூசனை புரியும் அர்ச்சகரின் பெண்பிள்ளை அரங்கேற்ற அவைக்குள் கொலுசொலிக்க நடந்துவந்தாள். அவையின் சில கண்கள் அவளைக் கவனித்தன. அவள் திருமலை மன்னருக்கு நன்கு அறிமுகமானவள். மன்னர் அவளைத் தன்னருகே வாவென்று அழைத்தார். சென்றாள். அவளைத் தனது மடியின் மீது அமர்த்திக்கொண்டு குமரகுருபரரைப் பார்த்தார். 

     குமரகுருபரர் குமாரகவிகளைப் பார்த்து, “தம்பி! காப்புப் பருவத்தின் முதற் செய்யுளைப் படி” என்றார்.

     “மணிகொண்ட நெடுநேமி” என்று தனது கனீரென்ற குரலில் பாடத் தொடங்கிய குமாரகவிகள் “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசும்கொண்டலே” என்று பாடலை நிறைவுசெய்தார்.

     “இது முதற்பருவமான காப்புப் பருவத்தின் முதற்செய்யுள். மீனாட்சியம்மை என்னும் குழந்தையைக் காக்க பல்வேறு தெய்வங்களை வேண்டி முறையிடும் பகுதியே காப்புப் பருவமாகும். இதன் முதற்செய்யுள் ஏன் திருமால் மீது பாடப்பட்டுள்ளது என்று அவை நினைக்கலாம். பிரம்மன், திருமால், சிவன் ஆகிய முப்பெருங் கடவுளருள் திருமால் காக்கும் கடவுள் என்பதால் அவரை முதலில் குறித்துப் பாடுவது மரபு. அவ்வகையில் முதற்செய்யுள் திருமாலுக்கானது” என்று சொல்லி அச்செய்யுளின் பொருளை யாவரும் அறியுமாறு விளக்கினார். 

     பின்னர் சிவபெருமான், சித்திவிநாயகர், முருகன், பிரம்மன், இந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சப்தமாதர், முப்பத்துமூவர் ஆகியோர் குறித்த காப்புப் பருவத்துச் செய்யுட்களை குமாரகவிகள் பாட ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள்விரித்தார் குமரகுருபரர். முதல்நாள் அரங்கேற்றம் அத்துடன் நிறைவுபெற்றது. இங்ஙனம் நாள்தோறும் ஒரு பருவம் அரங்கேற்றுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

     இரண்டாம் நாள் அரங்கேற்றம். செங்கீரைப் பருவத்தின் முதற்செய்யுளுக்குப் பொருள் கூறிக்கொண்டிருந்தார் குமரகுருபரர். முதல் நாளைப் போலவே அவைக்கு வந்த அர்ச்சகர் மகள் நேராகச் சென்று திருமலை மன்னரின் மடியில் அமரந்துகொண்டாள். இப்படியே நான்கு நாட்களும் நடந்தன. 

     ஐந்தாம் நாள்… அவை கூடியிருந்தது. திருமலை மன்னர் மடியில் அர்ச்சகர் மகள் அமர்ந்திருந்தாள். வெந்தநீறு நெற்றியில் ஒளிர சிறப்பிருக்கையில் அமர்ந்திருந்தார் குமரகுருபரர். முத்தப் பருவ அரங்கேற்றம் தொடங்கியது. குமரகுருபரர் “மெய்யன்பர்களே! இன்று அரங்கேற்றத்தின் ஐந்தாம் நாள். நேற்று சப்பாணிப் பருவத்தை நாம் சிந்தித்தோம். இன்று முத்தப் பருவச் செய்யுட்களை சிந்திக்கலாம். தாய் தந்தையருக்கு தமது மக்களின் உடலைத் தீண்டுவதும் அவர்களின் மழலைச் சொற்களைச் செவி மடுப்பதுமே இன்பம். ‘மக்கண் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு’ என்று வள்ளுவர் கூறுவது அனைவரும் அறிந்ததுதான். அவ்வகையில் குழந்தைக்கு பதினோராவது மாதம் நடக்கையில் பெற்றோர் தமது குழந்தையிடம் ‘முத்தம் தா’ என்று கொஞ்சிக் கேட்கும் வகையில் அமைப்பதுதான் முத்தப் பருவம்” என்று முத்தப் பருவத்தை அறிமுகம் செய்துவிட்டு குமாரகவிகளைப் பார்த்தார்.

“காலத்தொடு கற்பனைகடந்த கருவூலத்துப் பழம்பாடல்
கலைமாச் செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே”
என்று முத்தப் பருவத்தின் முதற் செய்யுளைப் பாடினார். 

     “முக்கண் சுடர்க்கு விருந்திடும் மும்முலையாய் முத்தம் தருகவே” என்று அவர் முதற்செய்யுளை நிறைவு செய்தவுடன் குமரகுருபரர் அதன் பொருளை விளக்கத் தொடங்கினார். முதற்செய்யுளுக்குப் பொருள் சொல்லியதும் மன்னரின் மடியில் அமர்ந்திருந்த அர்ச்சகர் மகள் எழுந்தாள். மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்துவிட்டு மறைந்து போனாள். பார்த்திருந்த அவை என்ன நடக்கிறது என்று அறியாது குழம்பியது. மன்னருக்கோ வியப்பு. குமரகுருபரருக்கு எல்லாம் விளங்கிற்று. ஐந்து நாட்களாக அர்ச்சகரின் மகள் வடிவில் வந்து அரங்கேற்றத்தில் கலந்துகொண்டது வேறு யாருமல்ல, அன்னை மீனாட்சியேதான் என்று அறிந்தனர்.

     “தாயே! மீனாட்சி! இந்த எளியவனின் பாடலை உடனிருந்து கேட்டாயா? அப்படிக் கேட்கும் அளவிற்கு நான் தகுதியுடைவனா? உன் கருணையை நான் என்னவென்று புகழ்வேன்” என்று உருகினார் குமரகுருபரர்.

     ஐந்து நாட்களாக மீனாட்சியம்மை குழந்தை வடிவில் தனது மடியில் அமர்ந்திருந்தாள் என்பதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தார் திருமலை மன்னர். நாவெழாது தவித்தார். நேராக குமரகுருபரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். முத்தப் பருவத்து அரங்கேற்றம் நெகிழ்ச்சியுடன் தொடங்கி நிறைவுபெற்றது. மதுரை முழுவதும் இதே பேச்சாயிற்று.

     அடுத்த நாள் அரங்கேற்றத்திற்கு மக்கள் திரள் வெள்ளமாகக் கூடியிருந்தது. அரங்கேற்றம் நிகழும் சந்நிதிக்கு வெளியிலும் மக்கள் ததும்பி நின்று குமரகுருபரரின் சொற்களைக் கேட்டனர். மீனாட்சியம்மையின் அருளுக்கு நாமும் ஆளாக மாட்டோமா என்ற உள்ளக்கிடக்கை அனைவரின் கண்களிலும் வெளிப்பட்டது. வருகைப் பருவத்துச் செய்யுட்களை குமாரகவிகள் பாட குமரகுருபரர் பொருள்சொல்லி வந்தார். எட்டு பாடல்கள் நிறைவடைந்தது. 

ஒன்பதாம் பாடல்… 
“தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும்
சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருஉள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர்ஓ வியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழல்காடு ஏந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே”
என்று குமாரகவிகள் பாடி நிறுத்தினார். 

     “தொடுக்கப்படும் தெய்வத் தன்மையுடைய பழைய பாடல்களாகிய மாலையின் பொருளாயிருப்பவளே! மணம் முற்றிய துறைகள் அமைந்த இனிய தமிழின் ஒழுகுகின்ற இனியசுவை போன்றவளே! ஆணவமாகிய கிழங்கைத் தோண்டி எறியும் தொண்டர்களின் மனமாகிய கோயிலில் ஏற்றப்படும் விளக்கே! வளர்கின்ற சிகரத்தையுடைய இமய மலையில் விளையாடுகின்ற இளைய மெல்லிய பெண் யானையே! வீசுகின்ற அலைகளையுடைய கடலை ஆடையாக உடுத்த பூமிக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற பரமசிவன் தனது சிறந்த மனதில் அழகு வழியும்படி தீட்டிப் பார்த்திருக்கும் உயிர்ச் சித்திரமே! வண்டுகள் தேனை வாய்மடுத்துத் துயில்கின்ற கூந்தற்காட்டைத் தாங்கி நிற்கும் இளமையான வஞ்சிக்கொடி போன்றவளே! வருக… மலயத்துவசன் பெற்ற பெரு வாழ்வே! வருக… வருக…” என்று பொருள் விளக்கினார் குமரகுருபரர். 

     அன்புநீர் பொழி கண்ணுடன் குமரகுருபரரின் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த திருமலை மன்னர், “குமரகுருபரரே! மீனாட்சியம்மையே நேரில் வந்து நேற்று இங்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினாள். இன்று வருகைப் பருவத்துப் பாடல்களில் அவளை வருக வருக என்று தாங்கள் அழைப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அதிலேயே என் மனம் ஊன்றி நிற்கிறது. ‘எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே’ ஆகா! உள்ளம் கொள்ளும் சொற்கள் இவை. தங்களிடம் ஓர் வேண்டுகோள். இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறை தாங்கள் பாடிப் பொருள்சொல்ல வேண்டும்” என்றார்.

     “மீனாட்சியம்மையின் பெருமைபாடி நாத்தழும்பேற ஏங்கும் எனக்கு தங்கள் வேண்டுகோள் மகிழ்ச்சியளிக்கிறது மன்னா. இதோ மீண்டும் இப்பாடலைச் சிந்திப்போம்.”

     மன்னரின் வேண்டுகோளின்படி குமரகுருபரர் மீண்டும் அப்பாடலைச் சொல்லிப் பொருள் விளக்கினார். மன்னர் மட்டுமல்ல, ததும்பி நின்ற மக்கள் திரளும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. 

     அடுத்த நான்கு நாட்களில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் நிறைவு பெற்றது. “புழுகுநெய்ச் சொக்கர் திருஅழகினுக்கு ஒத்தகொடி பொன்னூசல் ஆடியருளே” என்று மீனாட்சியம்மையைப் பொன்னூசல் ஆட்டி அரங்கேற்றத்தை நிறைவுசெய்தார் குமரகுருபரர். நிறைவுநாளில் திருமலை மன்னர் அவருக்குப் பல்வேறு சிறப்புகளைச் செய்தார். அவரையும் அவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஏடுகளையும் யானைமீது ஏற்றி ஆலவாய் அழகன்தன் திருக்கோயிலை வலம்வரச் செய்தார். 

     “திருமலை மன்னரே! அரங்கேற்றம் சிறப்பாக நிறைவுபெற்றது. இத்தனை அரசியல் சிக்கல்களுக்கும் மத்தியில் நாள்தோறும் அரங்கேற்றத்திற்கு தாங்கள் வந்திருந்து கேட்டது எனக்கு உவப்பளிக்கிறது.”

     குமரகுருபரரின் திருவடிகளை வணங்கிய மன்னர், “ஐயனே! தங்களால் என் வாழ்வும் அரசும் சிறப்புற்றது. மீனாட்சியம்மையின் அருட்கண்பார்வை எங்கள்மீதும் படுவதற்குத் தாங்களே முதற்காரணம். தங்கள் சொற்களால் புகழப்படுவதற்கு நான் பேறுபெற்றிருக்க வேண்டும். தாங்கள் எங்களுடனேயே சிலகாலம் தங்கியிருக்க அருள்செய்ய வேண்டும். அடியேனுடைய வேண்டுதலை மறுக்கக் கூடாது” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

     “திருமலை மன்னரே! அம்மையின் விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்” என்று சொல்லி மதுரையில் சிலகாலம் தங்கியிருந்தார். பரங்குன்றம் சென்று முருகக்கடவுளையும் போற்றிவந்தார். 

   மீனாட்சியம்மையின் ஆட்சியில் தமிழ்மணம் எங்கும் கமழ்ந்தது. குமரகுருபரர் என்னும் இளந்தென்றல் அதனை யாவருக்கும் இதமாய்க் கடத்தியது.  

(அரங்கேற்றம் தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment: