பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 6

 

இதழ் - 8                                                                    இதழ் -   
நாள் : 19-6-2022                                                      நாள் : ௧௯ -௦௬- ௨௦௨௨


ஆத்திசூடி (ஔவை)
 
ஊக்கமது கைவிடேல்
 
உரை

எச்செயலைச் செய்யும்பொழுதும் உள்ளத்தின் வலிமையைக் கைவிட்டுவிடாதே.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் - 6
     ஊரி னர்பலிக்கா வூர்சகட மேல்வீமன்
     தீரன் பகசூரன் றீதடக்கும் - காரணம்பார்
     தேக்குபுகழ்ப் புன்னைவன தீரனே யாவுறினும்
     ஊக்க மதுகை விடேல்
 
உரை
     நிறைந்த புகழினையுடைய புன்னைவனநாதனெனும் துணிவுடையோனே! ஊராரின் பலிக்காக சக்கரம் பொருத்திய வண்டியின்மேல் பீமன் சென்று வலிமையுடையவனான பகனெனும் சூரனின் தீச்செயலை அழித்ததன் காரணத்தை ஆராய்ந்து பார். (அது பீமனின் உள்ளத்து உறுதியைக் காட்டும்). எனவே, யாதொரு துன்பம் நேர்ந்தாலும் உன் உள்ளத்தின் உறுதியை மட்டும் கைவிட்டுவிடாதே.
 
பகன் கதை
     தருமன் முதலிய பாண்டவர் ஐவரும் துரியோதனனின் அரக்குமாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிப்பிழைத்து வேத்திரகீய நகரத்திலுள்ள வேதியர் ஒருவரின் இல்லத்தில் சென்று தங்கினர். அந்நகரத்திற்கு அருகில் ஏகசக்கரம் என்னும் காடொன்று இருந்தது. அதில் பகன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கும் அந்த ஊராருக்கும் ஓர் ஒப்பந்தம் இருந்தது. நாள்தோறும் குடிக்கொரு வண்டிச் சோறும் நரபலியும் திறையாக ஊரார் தரவேண்டும் என்பதே அவ்வொப்பந்தம். இப்படி அவன் கொடும்வாழ்வு வாழ்ந்துவரும் காலத்தில் பாண்டவர் தங்கியிருந்த இல்லத்து வேதியரின் திறைநாள் வந்தது. அவ்வில்லத்து வேதியரின் மனைவி தன் ஒரே மகனை எப்படி பலியாகத் தருவது என்று வருந்தி அழுதாள். அதனை அறிந்த குந்தி அவளது வருத்தத்தை நீக்கும்பொருட்டுத் தன் மகன் பீமனை பலியாக அனுப்புவதாகக் கூறினாள். பீமனும் ஒப்புக்கொண்டு வண்டிநிறைய சோற்றை எடுத்துச் சென்றான். ஆனால் ஏகசக்கர காட்டை அடைந்ததும் கொண்டுவந்த சோற்றைத் தானே உண்டு தீர்த்தான். சினத்துடன் எதிர்த்துவந்த பகனையும் ஊக்கத்துடன் கொன்றழித்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
விளக்கம்
     ஊர்சகடம் - ஊர்ந்து செல்லும் சக்கரம் பொருந்திய வண்டி. உள்ளத்து உறுதியே புகழைக் கொடுக்கும் என்பதைத் “தேக்குபுகழ் புன்னைவன தீரனே” என்றார். தேக்கு - நிறைவு; தீரன் - துணிவுள்ளவன். துன்பத்தில் மட்டுமல்லாது இன்பத்திலும் தன்னிலை இழக்காமல் இருப்பதே உள்ளத்து உறுதியென்பது ஆன்றோர் வாக்காகலின் 'யாவுறினும்' என்பதை 'இன்பம், துன்பம் எதுநேரினும்' என்று கொள்க. “உள்ளம் உடைமை உடைமை” (குறள், 592) என்று உள்ளத்து உறுதியினையே ஒருவனின் நிலையான செல்வமாக வள்ளுவர் கூறுவது நோக்கத்தக்கது. திருக்குறளின் ஊக்கமுடைமை (அதி.60) அதிகாரம் கண்டுணர்க.
கருத்து: எச்செயலைச் செய்தாலும் உள்ளத்து உறுதியை மட்டும் இழக்காமல் பார்த்துக்கொள் என்பது பாடலின் மையக்கருத்து.


( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

 

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 

1 comment:

  1. அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete