பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-61

இதழ் - 63                                                                                          இதழ் -
நாள் : 09-07-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தேசத்தோடு ஒத்துவாழ் ”
 
உரை
   நீ வாழும் நாட்டிலுள்ளவர்களுடன் இணங்கி வாழ்.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 61
    எல்லா மதத்திற்கு மெவ்வுயிர்க்கு நீர்நிழல்போல்
    நல்லாதரவை நயந்தருளி – வல்லாண்மை
    சூழ்தேசு புன்னைவனத் தோன்றலே நீயுமென்றும்
    வாழ்தேசத் தோடொத்து வாழ்.

உரை
    வலிமையும் அதனால் புகழும் கொண்ட புன்னைவன நாதனே! அனைத்து மதத்தவர்க்கும் மனிதர்கள் மட்டுமல்லாது ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் நீரும் நிழலும் வேறுபாடுகாணாது அளிசெய்வதுபோல நற்றுணையை விரும்பியளித்து நீ வாழ்க. நீயாளும் நாட்டு மக்களுடன் என்றும் இணங்கி வாழ்க.
 
விளக்கம்
    மதவேறுபாட்டுணர்வு கூடாது, நாடு என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை “எல்லா மதத்திற்கு மெவ்வுயிர்க்கும்” என்றார். நீரும் நிழலும் எவ்வித வேறுபாடுமின்ற மற்றவர்களின் துயர் களைவது போல பிறருக்கு நன்மை செய்தல் வேண்டும் என்பதை “நீர்நிழல்போல் நல்லாதரவை நயந்தருளி” என்றார். வல்லாண்மை – அற்றலுடைமை. தேசு – புகழ். 
 
கருத்து
     எக்காரணம் கொண்டும் வாழிடத்தில் பகைமை பாராட்டக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment:

  1. சிறப்பு
    இதனை எல்லோரும் பின்பற்றினால் நன்று

    ReplyDelete