இதழ் - 69 இதழ் - ௬௯
நாள் : 20-08-2023 நாள் : ௨0-0அ-௨௦௨௩
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 66
சஞ்சரித்து நின்ற சைலங் களையெல்லாம்
வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலாற் – செஞ்சரண
மண்ணளந்த புன்னை வனநாதா வென்றுநன்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல்.
வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலாற் – செஞ்சரண
மண்ணளந்த புன்னை வனநாதா வென்றுநன்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல்.
உரை
சிவந்த திருவடிகளால் மண்ணளந்த புன்னைவனநாதனே! ஒருகாலத்தில் சிறகுகொண்டு நடமாடிக் கொண்டிருந்த மலைகளெல்லாம் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்து மற்றவர்களுக்கு துன்பம் தரத்தொடங்கியதால் சினம்கொண்டு இந்திரன் அவற்றின் சிறகுகளைத் துண்டித்தார். எனவே உன்னால் பிறருக்கு விளையும் நன்மைகளை எண்ணி உனது உயர்ந்த நிலையிலிருந்து ஒருபோதும் தாழ்ந்துவிடாதே.
விளக்கம்
சஞ்சரித்து – நடமாடுதல். சைலம் – மலை. சலம் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரக் கூடியது என்று பொருள். தண்ணீர் ஓடும் தன்மையுடையதால் அதற்கு சலம் என்று பெயர். மலைகள் ஓரிடத்தில் நிலையாக நிற்கக் கூடியவை. ஆதலால் அதற்கு அசலம் என்று பெயர். ஆனால் ஒருகாலத்தில் மலைகளும் சிறகுகொண்டு நடமாடின என்பதை “சஞ்சரித்து நின்ற சைலங் களையெல்லாம்” என்றார் ஆசிரியர். இந்திரன் அவற்றின் சிறகுகளைத் துண்டித்து ஓரிடத்தில் நிழலையாக நிற்கச் செய்தார் என்பதை “வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலால்” என்றார். செஞ்சரணம் – சிவந்த திருவடிகள். அரசனை உலகளந்த திருமாலுடன் ஒப்பிட்டு “செஞ்சரண மண்ணளந்த புன்னை வனநாதா” என்றார்.
மலைகளின் கதை
முன்னொரு காலத்தில் மலைகளெல்லாம் சிறகுகளையுடையனவாய் ஆகாயத்தில் பறந்து நகரங்களில் போய்த் தங்கி நகரங்களையும் பிற உயிரிகளையும் அழித்துப் பெருந்துயர் விளைத்தன. அதனையறிந்த இந்திரன் அம்மலைகளின் சிறகுகளையெல்லாம் வெட்டிவிட்டான்.
கருத்து
நிற்கின்ற உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்துவிடாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
அழகான விளக்கம்
ReplyDelete