பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 7

  

இதழ் – 9                                                                         இதழ் – ௯
நாள் – 26-06-2022                                                         நாள் – உ௬.௬.௨௰உஉ


ஆத்திசூடி (ஔவை)
 
" எண்ணெழுத் திகழேல்

உரை
     எண்முறையையும் எழுத்துமுறையையும் இகழ்வாக நினையாதே.

 
ஆத்திசூடி வெண்பா (இராம்பாரதி)
 
பாடல் - 7
        எண்ணரிய கோளுடுக்க ளெல்லா மொருமையதாத்
        திண்ணந் துருவர்கையிற் சேர்தலின் - மண்ணுலகிற்
        போற்றுந் தமிழ்ப்பாகைப் புன்னைவன பூபாகேள்
        ஏற்றெண் ணெழுத்திக ழேல்

உரை
     நிலவுலகம் போற்றும் தமிழ் கூறு நல்லுலகமாம் பாகை என்னும் ஊரின் தலைவனான புன்னைவனநாதனே, கேட்பாயாக! எண்ணுதற்கரிய கோள்களையும் விண்மீன்களையும் சரியாக எண்ணுந்திறன் கைசேர்ந்ததால் துருவன் வாழ்வில் மேன்மையுற்றான். எனவே எண்ணையும் எழுத்தையும் இகழ்ந்து பேசாதே.

துருவன் கதை
     சுவாயம்பு மனுவின் மகனான உத்தானபாதனுக்கு இரண்டு மனைவிமார். ஒருத்தி சுருதி, மற்றொருத்தி சுநீதி. அவர்களுள் சுருதிக்கு உத்தமன் என்னும் மகனும், சுநீதிக்குத் துருவன் என்னும் மகனும் பிறந்தனர். ஒருநாள் உத்தானபாதன் அரியனையில் வீற்றிருக்கும்பொழுது உத்தமன் அவர் தொடையின்மீது ஏறினான். மற்றொரு மகனான துருவனும் ஏறமுற்பட்டான். அதைக் கண்ட சுருதி அவனை நோக்கி “நீ பட்டத்திற்கு உரியவனல்ல. அரியனையில் ஏறாதே” என்று தடுத்தாள். சுருதியின் மீதிருந்த மீயன்பால் அரசன் உத்தானபாதனும் அதற்கு உடன்பட்டு துருவனைத் தடுத்தான். உள்ளம் வருந்திய துருவன் தன் தாய் சுநீதியிடம் நடந்ததைத் தெரிவித்தான். தாயின் அனுமதியைப் பெற்று துருவன் சத்தமுனிவரையடைந்து, அவரிடம் உபதேசம் பெற்று தவஞ்செய்தான். தவத்தின் விளைவால் கோள்களையும் விண்மீன்களையும் பிணித்துள்ள சுழல்பாதைச் சக்கரத்தைக் கணக்குகளின்படி சுற்றியிழுத்துத் தனக்கேற்றவகையில் அமைக்கும் ஆற்றலைத் திருமாலின் அருளால் பெற்றான். அதனால் உயர்பதவியை அடைந்தான். தாய் சுநீதியும் அவனும் மேன்மையடைந்து இன்புற்றனர்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)


விளக்கம்
     கோள்கள் எண்ணுதற்குரிய அளவற்றன என்பதால் எண்ணரிய என்றார். உடுக்கள் - விண்மீன்கள். எண்ணரிய கோள்கள் எண்ணரிய உடுக்கள் என்றியைக்க. துருவன் கோள்களையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டில் சுழலச்செய்யும் அற்றல் பெற்றான் என்பதை “திண்ணந் துருவர் கைசேர்தலின்” என்றார். கைசேர்தல் - கட்டுப்பாட்டுள் வருதல். பூபா - தலைவா; எண்முறைக் கணக்கீட்டில் துருவன் தேர்ந்தவனானதால் அவன் வாழ்வில் மேன்மையுற்றான். எனவே எண்முறையை இகழாதே என்று அறிவுறுத்துகிறார்.

கருத்து
     எண்முறையையும் எழுத்துமுறையையும் தாழ்வாக நினைக்காமல் முயன்று கற்றுக் கொள்.
 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

 

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 
 

1 comment: