இதழ் - 80 இதழ் - ௮0
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
நாள் : 05-11-2023 நாள் : 0௫-௧௧-௨௦௨௩
பால் கொடுத்தவருக்கும் நஞ்சைக் கொடுக்கின்ற பாம்பைப் போன்றோருடன் பழக்கம் கொள்ளாதே.
பாடல் –77
வாசுகிமுன் னாட்பழகும் வானோர்க் கமுதெழுமுன்
மோசமுற நஞ்சுமிழ்ந்த மூர்க்கம்பார் – காசினியில்
நன்றறியும் புன்னைவன நாதா விஃதறிந்தே
என்றும்பாம் பொடுபழ கேல்.
உரை
உலகத்தில் புகழ்பெற்ற புன்னைவனநாதா! வாசுகி என்னும் பாம்பு முன்னொருநாள் பழக்கமுடைய தேவர்களுக்கு அவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது அமுதெழும் முன்னர் அல்லல்படுத்தும் நஞ்சை உமிழ்ந்த மூர்க்கச் செயலைக் காண்க. எனவே இதனையறிந்து பாம்பொடு பழக்கம்கொள்வதைத் தவிர்க.
விளக்கம்
வாசுகி – தெய்வப் பாம்புகளுள் ஒன்று. வானோர் – தேவர்கள். அமுதெழுமுன் – தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக பாற்கடலைக் கடைந்தபொழுது அமுதம் வெளிப்படுவதற்கு முன் ஆலகால நஞ்சு வெளிப்பட்டது. காசினி – உலகம்.
வாசுகி கதை
காசிப முனிவருடைய மனைவியர்களுள் ஒருத்தியாகிய கத்திரு என்பவளிடத்திலே அனந்தன், வாசுகி முதலிய பல பாம்புகள் பிறந்தன. அவற்றுள்ளே வாசுகி என்னும் பாம்பைத் தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது தாங்கள் கொண்ட மத்திலே கயிறாகப்பூட்டி இழுத்தார்கள். அப்போது வாசுகி என்னும் பாம்பு நஞ்சினை உமிழ்ந்தது.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
உடனிருப்போருக்கு அல்லல் தரும் பாம்பு போன்றோருடன் பழக்கம் கொள்ளாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment