இதழ் - 81 இதழ் - ௮௧
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
நாள் : 12-11-2023 நாள் : ௧௨-௧௧-௨௦௨௩
குற்றம் உண்டாகும்படி யாதொன்றையும் சொல்லாதே.
பாடல் –78
சாபால ராமன் சபையிலோர் சொற்பிழைத்துக்
கோபால னஞ்சுடர்மெய் குன்றியே – சோகமுற்றான்
ஆதலினாற் புன்னைவனத் தையனே யாவரிடத்
தேதும் பிழைபடச் சொல்லேல்.
உரை
புன்னைவனத்தின் தலைவனே! சாபாலராமனின் அவைக்களத்தில் கோபாலன் என்பவன் குற்றமுடைய சொற்களைச் சொல்லி அழகான ஒளிவீசும் உடல் வனப்பை இழந்து வருத்தமுற்றான். ஆதலால் யாரிடத்திலும் குற்றமுடைய சொற்கள் யாதொன்றையும் சொல்லாதே.
விளக்கம்
அம் – அழகு. சுடர் – ஒளி. மெய் – உடல். அம்சுடர்மெய் குன்றல் – ஒளிவீசும் அழகிய உடல் வனப்பை இழத்தல். ஐயன் – தலைவன். யாவரிடத்தும் ஏதும் என்பன அழுத்தமுடையன. தெரிந்தோர், தெரியாதோர் யாவரிடத்திலும் என்பது.
சாபாலராமன், கோபாலன் கதை இன்னது என்று புலப்படவில்லை.
கருத்து
யாரிடத்திலும் ஏதும் பிழையான சொற்களைச் சொல்லக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment