பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-79

இதழ் - 82                                                                                               இதழ் - 
நாள் : 19-11-2023                                                                                   நாள் : --௨௦௨௩ 

 
ஆத்திசூடி (ஔவை)
 பீடுபெற நில் 
 
உரை
    பெருமையடையும்படியாக நன்னெறியில் உறுதியாக நில்.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –79
        நீலிபழி யைக்களைந்து நின்மரபில் வேளாளர் 
        சூலிமுது கிற்சூட சோறிட்டு – மேலான 
        ஞாயம்பார் புன்னைவன நாதனே 
        யப்படியே நீயுமிகப் பீடுபெற நில்.

உரை
    புன்னைவனத்தின் தலைவனே! நீலி என்னும் பெண்ணின் பழியைக் களைந்து உன் மரபில் வந்த வேளாளர்கள் தங்கள் சொல்லினை தவறாது தக்க ஞாயம் செய்தனர். அவ்வறே நீயும் பெரிய பெருமை தரும் செயல்களில் உறுதியும் நிற்க.
 
விளக்கம்
    நீலி – பெண்ணணங்கு. பீடு – பெருமை.
 
நீலி கதை

    ஒரு பெண் தன்னாயகன் நாடோறும் வேறு பெண்களிடஞ் சென்று கொண்டாடி வருதலையறிந்து கோபத்தோடும் அவனைத் தடுத்து தன்வசமாக்கும்படி வேண்டிய உபாயங்கள் செய்தாள். அவனோ இவள் என் கருத்திற்கு மிகவும் இடையூறாய் நிற்கிறாளென்று நினைத்துக்கொண்டு அடுத்த ஊரிலே நடக்கும் ஒரு சிறப்புக் காட்டுகிறேன் என்று சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டுபோய் ஒரு காட்டின் நடுவிலே விட்டுக் கொன்று விட்டான். பின் அவள் ஒரு பிசாசாய்ப் பிறந்து நீலி என்னும் பெயர்பெற்று அவனைக் கொல்லக் கருதியிருந்தாள். அவனும் பின்னர் இறந்து ஒரு செட்டியாகப் பிறந்திருந்தான்.

    பின்னர் அந்தச் செட்டியின் சரிதத்தை ஒரு சோதிடன் பார்த்து அந்தச் செட்டியை நோக்கி நீ வடதிசை நோக்கிச் செல்வாயாயின் ஒரு பேயினாலே நிச்சயமாய் மரணமடைவாய். நான் ஒரு மந்திரவாள் தருகிறேன். அந்த வாள் உன்னிடம் இருக்கும் வரையும் அந்தப் பேய் உன்னை அணுக மாட்டாதென்று சொல்லி வாளையும் கொடுத்துவிட்டுச் சென்றான். அச்செட்டியும் அவ்வாளை எடுத்துக்கொண்டு வியாபாரஞ் செய்யும்படி வடதிசை நோக்கிப் போனான்.

    நீலி என்னும் பேயும் அச்செட்டியின் மனைவிபோல் வடிவங்கொண்டு ஒரு கள்ளிக் கொம்பினை ஒரு குழந்தையாக்கிக் கொண்டு அவனைத் தொடர்ந்தது. அவன் சில குறிப்பினால் இது பேயென்று அறிந்தும் தன்கையிலிருக்கும் மந்திரவாளின் வலிமையினாலே சிறிதும் பயப்படாமல் அங்கே எதிர்ப்பட்ட வேளாளர்களை அடைந்தான். அந்தப் பேயும் அவர்களை அடைந்து “இவர் என் கணவர். வெகுநாளாக என்னோடு விரோதமாயிருக்கிறார். நான் எவ்வளவோ பணிந்து நடந்தும் சிறிதும் இரக்கமின்றி என்னை வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களாகிய நீங்கள் அவருக்கு என் மேலுள்ள கோபத்தை நீக்கி இம்மண்டபத்திலே அவரையும் என்னையும் சில வார்த்தை பேசும்படி விட வேண்டும்” என்று வஞ்சகமாய்ச் சொல்லிற்று. செட்டியும் அவர்களை நோக்கி “இவள் என் மனைவியல்லள், கொல்லும்படி வந்த ஒரு பேய்” என்றான். அதுகேட்ட நீலி என்னும் பேய் “என்னிடுப்பிலுள்ள இக்குழந்தையை இவரிடம் விட்டால் அது இவரென் கணவரென்பதை உங்களுக்கு நிச்சயமாகக் காண்பிக்கும்” என்று சொல்லி அக்குழந்தையை நிலத்திலே விட அக்குழந்தையும் அச்செட்டியின் மேலேறி விழுந்து விளையாடிற்று.

    அதுகண்ட வேளாளரெல்லாம் செட்டியை நோக்கிச் “செட்டியாரே! நீரேன் பொய் சொல்லுகிறீர்? இவள் உம்முடைய மனைவிதான். இவள் வருந்தாமல் இம்மண்டபத்திற் புகுந்து இவளுக்குச் சமாதானஞ் சொல்லிவாரும்” என்றனர். தன் கையில் வாளுடன் அந்தச் செட்டி மண்டபம் நோக்கிச் சென்றான். அதுகண்ட நீலி அந்த வேளாளரை நோக்கி, “இநத வாளினை வாங்கிக் கொண்டு விடுங்கள். வாளோடு வருவாராயின் என்னைக் கொன்றுவிடுவார்” என்றது. அவர்கள் அவ்வார்த்தையை நிச்சயமென்று நம்பி வாளினை வாங்கச் செட்டி பயந்து இந்த வாளிருந்தபடியால் இதுவரையும் பிழைத்திருந்தேன். இது என்னைவிட்டு நீங்குமாயின் இந்தப் பேயினாலே இறந்து போவேன்” என்றான். “நீர் ஒருவர் இறந்து போவீராயின் நாங்கள் எழுபதின்மரும் உயிர்விடுகின்றோம் என்று தேற்றி அவர்கள் அவனை அனுப்பினர்.

    அவன் புகுந்த அக்கணமே அந்தப் பேயும் புகுந்து அவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவன் தாய்போல வடிவடிமடுத்து வந்து அவ்வேளாளர்களை நோக்கி “உங்களிடத்திலே வந்த என் மகனை யாது செய்தீர்கள்?” என்று கேட்டது. அவ்வேளாளர்கள் வெகுநேரம் பார்த்து செட்டி வாராமையாற் போய்க் கதவைத் திறந்துபார்த்து செட்டியினுடலம் கிழிக்கப்பட்டிருத்தலைக் கண்டு தாங்கள் எழுபது பேருந் தீயிலே குதித்துச் சொன்ன சொல்லுந் தவறாமல் இறந்தனர்.

கருத்து
    யாவரும் பெருமைசொல்லும் வகையில் நன்னெறியில் நடக்க வேண்டும்  என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment