இதழ் - 83 இதழ் - ௮௩
நாள் : 26-11-2023 நாள் : ௨௬-௧௧-௨௦௨௩
உலகத்தில் புகழெய்த்தும் நற்செயல்களைச் செய்துவாழ்.
பாடல் –80
விழுமிந் திரத்துய்மன் மிக்கபுகழ் சொல்லிக்
கழறமுன்போ னாடடைந்த காதை – பழமையன்றோ
செய்யபுகழ்ப் புன்னைவன தீரனே நீயுமிந்த
வையம் புகழ்பட வாழ்
உரை
நல்ல புகழையுடைய புன்னைவன தீரனே! தேவருலகிலிருந்து பூமியில் விழுந்த இந்திரத்துய்மன் என்பவனது மிக்க புகழை உலகத்தின் மிக மூத்த கூர்மதேவர் என்பவர் சொல்ல அவன் மீண்டும் தேவருலகை அடைந்து சிறந்த கதை என்பது பழமையன்றோ. ஆதலால் நீயும் இந்த உலகத்தில் புகழுடைய செயல்களைச் செய்து வாழ்வாயாக.
விளக்கம்
விழும் இந்திரத்துய்மன் – வானுலகிலிருந்து பூமியில் விழுந்த இந்திரத்துய்மன். கழற – சொல்ல. முன்போல் நாடடைந்த – பூமியிலிருந்து முன்போலவே வானுலகம் சென்றமை. பழமையன்றோ – பழையது என்பதோடு யாவரும் அறிந்த ஒன்று என்பதும் பொருள். வையம் – உலகம். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற வள்ளுவர் குறள் இவண் நினைக்கத்தக்கது.
இந்திரத்துய்மன் கதை
இந்திரத்துய்மன் என்னும் அரசன் எத்தனையோ யாகங்கள் செய்து தேவுலகம் பெற்று எண்ணிறந்த இந்திரர்காலம் இன்பம் அனுபவித்து வரும் நாட்களில் தேவர்கள் அவனை நோக்கி நின்பெயர் பூமியிலே நிலைபெறாமையினால் நீ பூமியிற்போய்ப் பெயர்நாட்டிவரக் கடவாய் என்று தள்ளிவிட்டனர். பூமியிலே விழுந்த அவ்வரசன் மார்க்கண்டேய முனிவரைக் கண்டு “முனிவரே! என் பெயர் உலகத்திலே உண்டா இல்லையா?” என்று கேட்டான். மார்க்கண்டேய முனிவர் “சிவனிடத்திலே நான் சிரஞ்சீவியாக வரம்பெற்ற நாள்முதல் இன்றுவரையும் 187 பிரம்மகற்மாயிற்று. இதற்குள்ளே உன் பெயரில்லை. என்னினும் மிக்க வயதுடைய கூகையொன்று இமயமலைச் சாரலிலே தவஞ்செய்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்டு கேட்டறி” என்றார். என்றவுடனே இந்திரத்துய்மன் ஒரு வெள்ளைக்குதிரை வடிவங்கொண்டு மார்க்கண்டேயரையும் சுமந்துகொண்டு போய் அக்கூகையைக் கண்டு கேட்டான். கூகை “நான் 224 பிரம்மகற்பங் கண்டேன். இதற்குள்ளே உன் பெயரில்லை. சரசுவதி நதி தீரத்திலே என்னினும் மூத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குரண்டதேவர். அவரைக் கண்டு கேட்டறி” என்றது. அதனையும் கூட்டிக்கொண்டுபோய் அக்குரண்டதேவரைக் கண்டு கேட்டான். குரண்டதேவர் “நான் 250 பிரம்மகற்பங் கண்டுள்ளேன். இதற்குள்ளே உன் பெயர் வரவில்லை. கோபஞ்சகத்திலிருந்து தவஞ்செய்யும் கூர்மதேவர் என்னினும் மூத்தவர். அவரைக் கண்டு கேட்டறி” என்றார். பின்னர் எல்லாரும் போய் அக்கூர்மதேவரைக் கண்டு கேட்டபோது கூர்மதேவர் இந்திரத்துய்மன் செய்த தருமம் முதலியவற்றை யாவருக்கும் புலப்படச் சொன்னார். உடனே தேவர்கள் விமானத்தோடு வந்து “அரசனே! நின்னைப் பூமியிலே விட்டது நின் புகழை விளக்க” என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். அரசனும் மார்க்கண்டேயர் முதலியோரை ஆங்காங்கு விடுத்துத் தேவர்களுடன் தேவுலகம் புகுந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
உலகத்தில் புகழடையும் செயல்களைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment