பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-82

இதழ் - 85                                                                                        இதழ் - 
நாள் : 10-12-2023                                                                           நாள் : --௨௦௨௩

 
ஆத்திசூடி (ஔவை)
 பெரியோரைத் துணைக்கொள் 
 
உரை
    அறிவிற் சிறந்த பெரியவர்களை தக்க துணையாகக் கொள்க.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –82
         தந்தை யிரணியனைத் தள்ளிப் பிரகலாதன்
         சிந்தையின்மா யன்றுணையே தேடினான் – சந்ததமும்
         நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
        குட்பெரியோ ரைத்துணைக் கொள்.

உரை
     எப்பொழுதும் நட்புணர்வில் நிற்கும் புன்னைவன நாத அரசனே! தனது தந்தையாகிய இரணியனை ஒதுக்கிவிட்டு பிரகலாதன் தனது சிந்தையில் திருமாலையே நாடிநின்றான். அதனால் இப்பெரிய உலகத்திற்குள் பெரியோரைத் துணையாகக் கொள்க.

விளக்கம்
     இரணியன் – பிரகலாதனின் தந்தை. திருமாலால் நரசிம்ம அவதாரம் கொண்டு அழிக்கப்பட்டவன். தள்ளி – ஒதுக்கி, புறக்கணித்து. தந்தை தீயவனாக இருக்குமிடத்தில் அவர்சொல் கேளாமல் அறத்தின்வழி நின்றான் பிரகலாதன். மாயன் – திருமால். “மாயோன் மேய காடுறை உலகம்” என்பது தொல்காப்பியம். பிரகலாதன் திருமாலையே துணையாகக் கொண்டான் என்பதை “மாயன் துணையே தேடினான்” என்றார். மகிபன் – அரசன். பா – அழகு. பாவுலகம் – அழகான இவ்வுலகம். 

கதை
     (இரணியன் கதை ’கடிவது மற’ என்ற ஆத்திசூடியில் காண்க. அத்திசூடி வெண்பா – 32)

கருத்து
   அறிவார்ந்த பெரியவர்களை என்றும் துணையாகக் கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment